சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்: பைனலில் பாம்ப்ரி தாம்சன் மோதல்: பாலாஜி - விஷ்ணு ஜோடி சாம்பியன்

தினகரன்  தினகரன்

சென்னை: முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவின் யுகி பாம்ப்ரி தகுதி பெற்றார். அரை இறுதியில் தென் கொரியாவின் டக்கீ லீயுடன் நேற்று மோதிய பாம்ப்ரி 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர்7-5, 6-2 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு அரை இறுதியில் முதல் நிலை வீரர் ஜோர்டான் தாம்சன் (ஆஸி.) 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினசை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இந்த தொடரின் டாப் 2 வீரர்களான ஜோர்டான் தாம்சன் - யுகி பாம்ப்ரி மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த பைனலில் இந்தியாவின் ராம் பாலாஜி - விஷ்ணுவர்தன் ஜோடி 7-6 (7-5), 5-7, 10-5 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி துருக்கியின் செல் லிகெல் - டானிலோ பெட்ரோவிச் (செர்பியா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 44 நிமிடம் நடதது.

மூலக்கதை