11,400 கோடி வங்கிக் கடன் மோசடி: வெளிநாடு தப்பிய நீரவ் மோடியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியது சிபிஐ

தினகரன்  தினகரன்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி தொடர்பாக பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது தொழில் கூட்டாளி மெகுல் சோக்சி ஆகியோர் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. வெளிநாடு தப்பி சென்ற நீரவ் மோடியை பிடிக்க இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரி நீரவ் மோடி ரூ.11,400 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாக வங்கி தரப்பில் சிபிஐ.யிடம் 2 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி, சகோதரர் நிஷால், தொழில் கூட்டாளி மெகுல் கோக்சி மற்றும் மோசடிக்கு உதவிய ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது.இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீரவ் மோடிக்கு சொந்தமான நகைக்கடை, தொழிற்கூடம், அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தியது. இதில், ரூ.5,100 கோடி மதிப்பிலான வைரம், தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி நிர்வாகம் சிபிஐ.யிடம் கடந்த மாதம் 31ம் தேதி புகார் கொடுத்த நிலையில், கடந்த மாதம் 1 முதல் 6ம் தேதிக்குள் நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் வெளிநாடு தப்பி விட்டதாக சிபிஐ கூறியுள்ளது.இந்நிலையில், நிதி மோசடி தொடர்பாக நீரவ் மோடி மற்றும் சோக்சி நேரில் ஆஜராகி விளக்குமாறு அவர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளி சோக்சி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் அவர்களை  பதவியிலிருந்து நீக்கவும் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’   என்றனர். இதற்கிடையே, நீரவ் மோடியின் தொழில் கூட்டாளியான சோக்சி ரூ.4,886 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகார் தொடர்பாக சிபிஐ நேற்று புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், சோக்சி பங்குதாரராக உள்ள கீதாஞ்சலி குழும நிறுவனங்களில் அமைந்துள்ள மும்பை, புனே, சூரத், ஜெய்ப்பூர், ஐதராபாத் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. அதே நேரத்தில், நீரவ் மோடி தற்போது எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளது. இதனை ஏற்று இன்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கிடையே, நீரவ் மோடி, அவரது குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமானி 29 சொத்துக்களையும், 109 வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை நேற்று முடக்கியுள்ளது.மார்ச் 31க்குள் கடன் திருப்பி தரப்படும்பஞ்சாப் நேஷனல் வங்கியின் உறுதிமொழி சான்றிதழை வைத்து கடன் கொடுத்த மற்ற வங்கிகளுக்கு வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கடன் தொகை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த வங்கி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.8 அதிகாரிகள் சஸ்பெண்ட்கடன் மோசடிக்கு உதவியது தொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 8 அதிகாரிகள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் பொது மேலாளர் ஆவார். இதுவரை நடந்த விசாரணையில், மொத்தம் 18 அதிகாரிகளை வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய வங்கி அதிகாரிகள் 4 பேரிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. பாஸ்போர்ட் முடக்கம்அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டதின் பேரில், நீரவ் மோடி, சோக்சியின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 4 வாரங்களுக்கு  முடக்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘அமலாக்கத்துறை பரிந்துரையின் அடிப்படையில், நீரவ் மோடி, சோக்சியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க ஒரு வார காலம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குள் அவர்கள் பதிலளிக்க தவறினால், ஒரு வாரத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.பஞ்சாப் வங்கி உத்தரவாதத்தால் 1,360 கோடி வழங்கிய எஸ்பிஐநீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் அதிகாரிகள் சிலர் உதவியுடன் போலியான உறுதிமொழிச் சான்றினை பெற்றுள்ளார். அதை அடிப்படையாக வைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கி கிளைகளில் பல கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளார். அதன்படி, பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ) பஞ்சாப் நேஷனல் வங்கியின் உறுதிமொழிச் சான்றினை அடிப்படையாக வைத்து நீரவ் மோடிக்கு கடன் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக வங்கியின் தலைவர் ராஜ்னிஷ் குமார் கொச்சியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நீரவ் மோடிக்கும் எங்கள் வங்கிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. பஞ்சாப் நேஷனல் வங்கியின் உறுதிமொழிச் சான்றினை அடிப்படையாக வைத்தே அவருக்கு ரூ.1,360 கோடி கடன் வழங்கப்பட்டது. கீதாஞ்சலி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகை மிகவும் குறைவே’’ என்றார்.

மூலக்கதை