தெ.ஆ-வுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று 5-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா

தினகரன்  தினகரன்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணி 46.5 ஓவரில்  204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸோண்டோ அதிகபட்சமாக 54 ரன் எடுத்தார். பெலுக்வாயோ 34, டி வில்லியர்ஸ் 30, கேப்டன் மார்க்ராம் 24, கிளாசன் 22, மார்கெல் 20, அம்லா 10 ரன் எடுத்தனர்.இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் கைப்பற்றினார். பூம்ரா, சாஹல் தலா 2, குல்தீப், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான், ரோகித் ஷர்மா இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 15 ரன் எடுத்து என்ஜிடி பந்துவீச்சில் கிளாசன் வசம் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்க்க, இந்திய ஸ்கோர் சீராக உயர்ந்தது. தவான் 18 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ரகானே ஒருமுனையில் பொறுமையாக கம்பெனி கொடுக்க கோஹ்லி அதிரடியாக ஆடி ஒருநாள் அரங்கில் 35-வது சதம் விளாசி அசத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதம் இது என்பது குறிபிடத்தக்கது. 32.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதன்மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என இந்திய அணி கைப்பற்றியது. மேலும் தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக தொடரை கைப்பற்றி கோஹ்லி & கோ வரலாற்று சாதனை படைத்ததுடன் ஐசிசி தரவரிசையிலும் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி அசத்தியுள்ளது.

மூலக்கதை