சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இருந்து நீக்கப்பட்டேன்: சுரேஷ் ரெய்னா வருத்தம்

தினகரன்  தினகரன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து, அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி நடைபெற்ற தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டம்தான் அவர் விளையாடிய கடைசி ஒரு நாள் போட்டி. 2017 பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கு பின் டி20 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வரும் 18ம் தேதி (நாளை மறுநாள்) ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டி: சிறப்பாக விளையாடிய போதிலும், அணியில் இருந்து நீக்கப்பட்டதால் மன வேதனையடைந்தேன். தற்போது யோ-யோ டெஸ்ட்டை (இந்திய அணியின் உடல் தகுதி தேர்வு. இதில், வென்றால்தான் அணியில் இடம் பிடிக்க முடியும்) க்ளியர் செய்து விட்டேன். அத்துடன் மன ரீதியாக மிகவும் வலுவாக உணர்கிறேன். இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசையுடன் இத்தனை மாதங்களாக கடுமையாக பயிற்சி செய்தேன். அந்த நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் இத்துடன் விட்டு விட மாட்டோன். என்னால் முடிந்த காலம் இந்திய அணிக்காக விளையாடுவேன். 2019 உலக கோப்பையில் நான் விளையாட வேண்டும். ஏனெனில் இங்கிலாந்தில் நான் சிறப்பாக விளையாடியுள்ளேன். 2019 உலக கோப்பையில் விராட் கோஹ்லி தொடர் நாயகன் விருது வெல்பவராக இருக்கலாம். அணியில் எனக்கான இடம் இன்னமும் இருக்கிறது என்றே நம்புகிறேன். அத்துடன் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள இந்த 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும் என்றும் உறுதியாக நம்புகிறேன். எனக்கு 31 வயதாகிறது. ஆனால் வயது என்பது வெறும் எண்கள்தான். மீண்டும் அறிமுக வீரராக களமிறங்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். முகமது ஆமீர் வாழ்த்துதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ள இதர வீரர்கள் லோகேஸ் ராகுல், ஜெயதேவ் உனத்காட் ஆகியோருடன் சுரேஷ் ரெய்னா ஜோஹன்னஸ்பர்க்கிற்கு நேற்று புறப்பட்டு சென்றார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் சுரேஷ் ரெய்னாவிற்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர், தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை