தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இன்று கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற இந்தியா முனைப்பு

தினகரன்  தினகரன்

செஞ்சூரியன்: இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்ற இந்திய அணி முனைப்புடன் உள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில், முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.தொடரை கைப்பற்றி விட்டதால், கடைசி ஆட்டத்தில் சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மாற்று வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என கேப்டன் கோஹ்லி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால், புவனேஸ்வர் குமார், பும்ரா வேகக் கூட்டணிக்கு பதிலாக, முகமது ஷமி, சர்துல் தாகூர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. கேப்டன் கோஹ்லியே ஓய்வெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இதே போல, தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டேவுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அடுத்ததாக டி20 தொடர் தொடங்க உள்ளதால், எஞ்சிய கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று முழு நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு செல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. இதுவரை நடந்த 5 ஒருநாள் போட்டியிலும், இந்திய அணியின் துவக்க வரிசை ஆட்டக்காரர்களே முழுமையாக விளையாடி உள்ளனர். ரோகித் ஷர்மா, தவான், கோஹ்லி ஆகியோர் மட்டுமே இந்திய அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.மிடில் ஆர்டர் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. டோனி, ரகானே தலா ஒரு போட்டியில் ஓரளவுக்கு ரன் சேர்த்துள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 4 இன்னிங்சில் வெறும் 26 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், அடுத்தடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என முக்கிய தொடர்கள் உள்ளதால் மிடில் ஆர்டரை பலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. தென் ஆப்ரிக்காவை பொறுத்த வரையில், ஆறுதல் வெற்றியை எதிர்நோக்கியே இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அந்த அணி போதிய பலமின்றி காணப்படுகிறது. எனவே, கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, அஜிங்க்யா ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர். தென் ஆப்ரிக்கா: எய்டன் மார்க்ராம் (கேப்டன்), ஹாஷிம் அம்லா, ஜீன் பால் டுமினி, ஏபி டி வில்லியர்ஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மார்னி மார்கெல், கிறிஸ் மோரிஸ், லுங்கி என்ஜிடி, அந்திலே பெலுக்வாயோ, காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்சி, கேயலைல் ஸோண்டோ, பர்கான் பெகார்டியன், ஹெய்ன்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்). * ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் அதிரடி துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச்சுக்கு, வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்.8ம் தேதி நடக்கும் டெல்லி டேர்டெவில்சுக்கு எதிரான பஞ்சாப்பின் முதல் லீக் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக சக வீரரும், டெல்லி டேர்வில்ஸ் அணியில் புதிதாக இடம் பெற்றுள்ளவருமான மேக்ஸ்வெல் பங்கேற்க இருப்பதால் அவரும் இப்போட்டியில் பங்கேற்க மாட்டார்.* ஆடுகளத்தில் இந்திய கேப்டன் கோஹ்லி தனது ஆக்ரோஷத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. அந்த ஆக்ரோஷம் எப்போதும் அணிக்கு நன்மையாகவே அமைந்து விடாது. எப்போதுமே ஒருவரால் ஆக்ரோஷமாக இருந்துவிட முடியாது. தற்போது இளம் கேப்டனாக உள்ளதால் ஆக்ரோஷமாக செயல்படுகிறார். ஆனால் அவரும் அனுபவப்படும்போது, வயதாகும் போது ஆக்ரோஷம் குறையும். அதற்கு இப்போதே கோஹ்லி தயாராவது நல்லது. மற்றபடி  ஆட்டத்தின் மீதான அவரது ஈடுபாடு பாராட்டுக்குரியது’’ என தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் காலிஸ் அறிவுரை கூறி உள்ளார்.* குல்தீப் யாதவ்வும், சாஹலும் இப்படியே தங்கள் ஆட்டத் திறனை தொடர்ந்தால் இந்திய அணியை யாராலும் வீழ்த்த முடியாது. இருவரும் சிறப்பாக பந்துவீசுகிறார்கள்’’ என இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.* அஷ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு இன்னும் வாய்ப்பிருப்பதாக சிலர் கூறுகிறார். ஆனால் என்னை பொறுத்த வரையில், சாஹல், குல்தீப் இருவரில் யாராவது காயமடைந்தால் மட்டுமே அஷ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்புக்கு வாய்ப்பு கிடைக்கும். 2019 உலக கோப்பை கிரிக்கெட் ரேசில் இவர்கள் இருவருக்குமே இடமில்லை’’ என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அதுல் வாஸ்சன் கூறி உள்ளார்.* இந்தாண்டு இறுதியில் ஒடிசாவில் நடக்க உள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை