உலக கோப்பை கிரிக்கெட் : தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது நேபாளம்

தினகரன்  தினகரன்

விந்தோக்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுக்கு நேபாளம் முதல் முறையாக முன்னேறி உள்ளது. 2019 உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக ஐசிசி உலக கிரிக்கெட் டிவிசன் 2 போட்டிகள் நமீபியாவின் விந்தோக்கில் நடக்கின்றன. இதன் கடைசி லீக் போட்டியில் நேபாளம், கனடா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கனடா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தது. துவக்க வீரர் விஜிரத்னே 103 ரன் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய நேபாளத்தின் ரெக்மி 3, லமிச்ஹனே 2, வெசாகர், கரண் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.அடுத்து களமிறங்கிய நேபாள அணி 24.1 ஓவரில் 144 ரன்னுக்கு 9 விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், நேபாளம் தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கரண், லமிச்ஹனே 51 ரன் சேர்த்து அணியை வெற்றி பெறச் செய்தனர். நேபாள அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. கரண் 42, லமிச்ஹனே 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக நேபாள அணி உலக கோப்பை தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. உலக கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து,நெதர்லாந்து அணிகளும், பி பிரிவில் யுஏஇ, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, ஹாங்காங் அணிகளும் உள்ளன. இவற்றிலிருந்து 2 அணிகள் உலக கோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறும்.

மூலக்கதை