விஜய் ஹசாரே டிராபி ராஜஸ்தானுக்கு எதிராக தமிழகம் ஆறுதல் வெற்றி

தினகரன்  தினகரன்

சென்னை: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தமிழக அணி கேப்டன் அபராஜித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். தமிழக வீரர்கள் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ராஜஸ்தான் 38.2 ஓவரிலேயே 141 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சேதன் பிஸ்ட் 36, குப்தா 27, அபிமன்யு லம்பா 24* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர் 5, ஜே கவுசிக், ஆர்.அஷ்வின் தலா 2, ரகில் ஷா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தமிழகம் 23.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து எளிதாக வென்றது. கங்கா தர் ராஜு 28, காந்தி 3, ஜெகதீசன் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் அபராஜித் 55 ரன், பாலச்சந்தர் அனிருத் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.தமிழக அணி 4 புள்ளிகள் பெற்றது. சி பிரிவில் அனைத்து அணிகளும் தலா 6 லீக் ஆட்டத்தில் விளையாடி முடித்த நிலையில், ஆந்திர அணி 6 போட்டியிலும் அபாரமாக வென்று 24 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. மும்பை (16), மத்திய பிரதேசம், கோவா தலா 12 புள்ளிகள் பெற்றன. தமிழகம், ராஜஸ்தான் தலா 8 புள்ளிகள் பெற்ற நிலையில், குஜராத் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. சி பிரிவில் இருந்து ஆந்திரா, மும்பை அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 17ம் தேதியுடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. நான்கு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால் இறுதியில் மோத உள்ளன (பிப். 21, 22). அரை இறுதி ஆட்டங்கள் 24ம் தேதியும், இறுதிப் போட்டி 26ம் தேதியும் நடைபெறும்.

மூலக்கதை