தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் ஒரே நாளில் 668 ஆமை முட்டைகள் கண்டெடுப்பு!

விகடன்  விகடன்
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் ஒரே நாளில் 668 ஆமை முட்டைகள் கண்டெடுப்பு!

 தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் இன்று ஒரே நாளில் கடலின் தூய்மைக் காவலனாக விளங்கும் ஆமைகளின் 600-க்கும் மேற்பட்ட முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.


மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகளவிலான ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. கடலின் தூய்மைக் காவலனாக விளங்கும் இத்தகைய ஆமைகள் கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் மற்றும் மீனவர்களின் அறியாமையால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கவும் அழிந்துவரும் ஆமை இனங்களை வளர்க்கவும் வன உயிரின பாதுகாப்பு ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆமைகள் முட்டையிடும் கடலோரப் பகுதிகளில் குஞ்சு பொரிப்பகம் அமைத்துள்ளனர்.
 மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் தொடங்கி அரிச்சல் முனை வரையிலான கடலோரப்பகுதிகளில் ஆமைகள் முட்டைகள் இட்டுச் செல்கின்றன. இவ்வாறு மணலில் இட்டுச் செல்லப்படும் முட்டைகளைச் சேகரித்து அவை குஞ்சுகளாக வெளிவரும் வரை பாதுகாத்து, பின்னர் அவற்றைக் கடலில் விடுகின்றனர். கடந்த வாரத்தில் சுமார் 125 ஆமை குஞ்சுகள் இது போன்று கடலில் விடப்பட்டது.
 இந்நிலையில் இன்று தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் 6 இடங்களில் இருந்து 668 ஆமை முட்டைகளை வன உயிரினப் பாதுகாப்பு வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையில் ஊழியர்கள் சேகரித்தனர். இந்த ஆண்டுகான ஆமை முட்டை சேகரிப்பில் இன்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான 668 முட்டைகள் சேகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சேகரிக்கப்பட்ட முட்டைகள் அனைத்தும் குஞ்சு பொரிப்பகத்துக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை