இலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

விகடன்  விகடன்
இலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி 6 மாவட்ட மீனவர்கள் நடத்தவிருக்கும் பாம்பன் பாலம் முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (13.2.2018) முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.


 

பாக் நீரிணை கடல் பகுதியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து செல்வது தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. தற்போது வரை இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 180-க்கும் அதிகமான விசைப்படகுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களையும் படகுகளையும் மீட்டுத் தர வலியுறுத்தி மீனவர்கள் பல போராட்டங்கள் நடத்தியும் பலன் ஏதுமில்லை.
இதையடுத்து இம்மாதம் 16-ம் தேதி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் முற்றுகை போராட்டம் நடத்த 6 மாவட்ட மீனவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்தப் போராட்டம் தொடர்பாக ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர் சங்கக் கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் அல்போன்ஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், 16-ம் தேதி நடைபெறும் பாம்பன் பாலம் முற்றுகை போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்பது எனவும், இதில் மீனவர்கள், சார்பு தொழிலாளர்கள், மகளிர் அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்கச் செய்யும் வகையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றிலிருந்து மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை