``விதிகளை மீறி கோயில், பள்ளிக்கூடங்கள் அருகே டாஸ்மாக் கடை!’’ - அகற்றப் போராடும் பொதுமக்கள்

விகடன்  விகடன்
``விதிகளை மீறி கோயில், பள்ளிக்கூடங்கள் அருகே டாஸ்மாக் கடை!’’  அகற்றப் போராடும் பொதுமக்கள்

காரைக்குடி நகராட்சி 28வது வார்டில் நகர சிவன் கோயில் பகுதியில் அரசு விதிகளைமீறி தனியார் கட்டடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இதனருகே சிவன் கோயில், முத்தாலம்மன் கோயில், சிவகாளியம்மன் கோயில்கள் உள்ளன.மேலும் இதனருகே அரசு உதவிபெறும் மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. மேலும், தனியார் நடத்தும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியும் உள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிக்குள் விதிகளை மீறி மதுபானக்கடை வைத்துள்ளதால் பள்ளி மாணவ, மாணவியர், கோயிலுக்குச் செல்லும் பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

குடித்து விட்டு ரகளை செய்யும் குடிமகன்களால் பெண்கள், மாணவியர் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர். மேலும் ஆண்கள் துணையின்றி பெண்கள் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலையும் உள்ளது. பள்ளி அருகிலேயே மதுபானக்கடை இருப்பதால் மாணவர்களின் கவனம் திசை திரும்புகிறது. மேலும், குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் கூட்டமாக அமர்ந்து குடித்துவிட்டு, பொதுமக்களுக்குத் தொந்தரவு செய்கின்றனர். அதேபோல், காலி பாட்டில்களைச் சாலையில் வீசிச் செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``மகர் நோன்புப் பொட்டல் அருகிலிருந்த மதுபானக் கடையை வருமானத்தைப் பெருக்கும் வகையில் கோயில்கள், பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகள் இருக்கும் பகுதிக்கு 2 மாதத்திற்கு முன் மாற்றினர். இதனால் பெண்கள் கோயிலுக்கும், மாணவியர் பள்ளிக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் வரும் குடிமகன்களால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. குடிபோதையில் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுகின்றனர். அதேபோல் உடைகளின்றி சாலையில் அவர்கள் கிடப்பதால், மாணவிகள் அவ்வழியே நடந்து செல்லவே அஞ்சுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்தி காரைக்குடியில் கோயில்கள் நிறைந்த பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மூலக்கதை