துணை ராணுவ முகாமை தாக்க பயங்கரவாதிகள் முயற்சி!!

PARIS TAMIL  PARIS TAMIL
துணை ராணுவ முகாமை தாக்க பயங்கரவாதிகள் முயற்சி!!

காஷ்மீரின் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். பின்னர் ராணுவத்துடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஸ்ரீநர் அருகே உள்ள கரன் நகர் பகுதியில் அமைந்துள்ள, துணை ராணுவப்பிரிவான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாமுக்குள் நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் நுழைய முயன்றனர். பயங்கர ஆயுதங்களுடன் முகாம் அருகே வந்த அந்த 2 பயங்கரவாதிகளை காவலாளி கண்டுபிடித்தார்.

உடனே அவர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் பயங்கரவாதிகள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை சி.ஆர்.பி.எப். வீரர்கள் துரத்திச்சென்றனர். எனவே அந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டுக்குள் சென்று பதுங்கினர்.

இதைத்தொடர்ந்து ராணுவ கமாண்டோ படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இணைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டுக்குள் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளை நோக்கி தாக்குதலை தொடுத்தனர்.

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் முஜாகித் கான் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீட்டுக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கு விட்டுவிட்டு துப்பாக்கிச்சத்தம் கேட்டு வருவதாக கடைசியாக வந்த தகவல்கள் தெரிவித்தன.

இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் மீது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை வீரர்கள் விரட்டியடித்தனார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சி.ஆர்.பி.எப். முகாமுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இந்த முகாமுக்கு அருகே அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில்தான் கடந்த 7-ந் தேதி போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி நவீத் ஜாட்டை சிலர் மீட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை