கொலைவெறி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் சதி

தினமலர்  தினமலர்
கொலைவெறி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் சதி

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை, பரபரப்புமிக்க பகுதியில் வெடிக்கச் செய்து, தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள், சதித் திட்டம் போட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், காஷ்மீரில், இரு தற்கொலை படை தாக்குதல்களும், ஜம்முவில் ஒரு தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆறு பேர், பொதுமக்களில் ஒருவர், 10 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள், கூட்டு சதித் திட்டம் போட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இந்த அமைப்புகள், ஜம்மு - காஷ்மீரில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை, பரபரப்புமிக்க பகுதியில் வெடிக்கச் செய்து, பெரியளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளன.தவிர, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பும், இதே போன்ற தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் மொபைல் போன் பேச்சுக்களை இடைமறித்து கேட்ட போது, இந்த தகவல் அம்பலமானது. ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு, ஏற்கனவே, 2001ல், ஜம்மு - காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகரில், சட்டசபை கட்டடம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட, டாடா சுமோ வாகனத்தை மோதச் செய்து, தாக்குதல் நடத்தியது.

அந்த தாக்குதலில், 40 பேர் பலியாகினர்; மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.சமீபத்தில், காஷ்மீர் சிறையில் இருந்து, பாக்.,கின், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, நவீத் ஜட் தப்பி ஓடினான். அதன்பின், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

சோபியான், குல்காம் மாவட்டங்களில், நவீத்தை பார்த்ததாக, சிலர், போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். தற்கொலை படை தாக்குதல் திட்டத்துக்கு, நவீத் ஜட் உதவி வருவதாக கூறப்படுகிறது.தாக்குதல் முறியடிப்பு ஸ்ரீநகரின், எல்லை பாதுகாப்பு படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு, இரு பயங்கரவாதிகள் முயற்சித்தனர். நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், முகாமுக்கு அருகில் இருவர், கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் இருப்பதை, வீரர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, தப்பியோடிய அந்த பயங்கர வாதிகள், அருகில் உள்ள கரண் நகரில், ஒரு பழைய கட்டடத்துக்குள் புகுந்தனர். அந்த கட்டடத்தை, வீரர்கள் சுற்றி வளைத்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகள் சுடத் துவங்கினர்; வீரர்களும் மறு தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில், வீரர் ஒருவர் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மூலக்கதை