எல்லை பகுதிகளில் தொடர் தாக்குதல் பாஜ ஆட்சியில் பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எல்லை பகுதிகளில் தொடர் தாக்குதல் பாஜ ஆட்சியில் பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்தபின் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சமீபகாலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய ராணுவ நிலைகள், எல்லையோர கிராமங்களை குறிவைத்து நடத்தும் தாக்குதலில், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்புதான் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அதிகளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதுடன், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டுள்ளது.

பாஜ ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் 500 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 2,474 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது. ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உயிரிழப்புக்கு பாஜ அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த ஆட்சியின் தவறான கொள்கைகளால்தான் இதுபோன்று நடந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதல் காரணமாக எல்லையோர பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தாங்கள் வசித்த இடங்களை விட்டு வெளியேறி விட்டனர். 84 பள்ளிகள் அடிக்கடி மூடப்படுவதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை