சிறையில் உள்ள லாலுவை சந்தித்தார் சரத் யாதவ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறையில் உள்ள லாலுவை சந்தித்தார் சரத் யாதவ்

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை, ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து விலகிய சரத் யாதவ் சந்தித்து பேசினார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவராக விளங்கிய சரத் யாதவ், லாலுவை சிறையில் சந்தித்து பேசினார்.

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. லாலு, நிதிஷ்குமார் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்த நிலையில், பாஜவுடன் சேர்ந்து ஆட்சியை தக்க வைத்தார் நிதிஷ்குமார்.


பாஜவுடனான கூட்டணிக்கு ஐக்கிய ஜனதாதளத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன், எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.

தற்போது புதுக்கட்சி தொடங்கும் நடவடிக்கைகளில் சரத் யாதவ் ஈடுபட்டுள்ள நிலையில், லாலுவுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்து, பாஜவை வீழ்த்த லாலு பிரசாத் திட்டமிட்டிருந்தார். சிறைக்கு செல்லும் முன்பு அதற்கான பணிகளிடம் ஈடுபட்டிருந்தார்.

இதேபோல், சரத் யாதவும் பாஜவை எதிர்க்கும் முடிவில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், லாலுவுடன் இணைந்து மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பது குறித்து அவருடன், சரத் யாதவ் விவாதித்ததாக தெரிகிறது.


.

மூலக்கதை