செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் லைசென்ஸ் ரத்து: மேற்கு வங்க அரசு அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் லைசென்ஸ் ரத்து: மேற்கு வங்க அரசு அதிரடி

கொல்கத்தா: செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் டிரைவரின் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும் என மேற்கு வங்க அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவது தற்போது அதிகரித்து வருகிறது.

இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

 

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில், டிரைவர் ஒருவர் செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டி சென்றபோது, பஸ் நிலைதடுமாறி ஆற்றி விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு மேற்கு வங்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செல்போன் பேசியபடி பேருந்து ஓட்டி செல்லும் டிரைவரிடம் எவ்வித விசாரணையும் இன்றி உடனடியாக அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அம்மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேருந்தை ஓட்டி செல்லும் டிரைவர்கள் செல்போன் பேசியது கண்டறியப்பட்டால் உடனடியாக அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். இதைக்கொண்டு தவறு செய்யும் டிரைவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் டிரைவரை படம் பிடித்து சமூக வலைதளத்தில் மக்கள் பதிவிட வேண்டும். மது குடித்துவிட்டு பணிக்கு வரும் டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


.

மூலக்கதை