அவசரநிலை அமலில் உள்ள நிலையில் மாலத்தீவு தலைமை நீதிபதி, முன்னாள் அதிபர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
அவசரநிலை அமலில் உள்ள நிலையில் மாலத்தீவு தலைமை நீதிபதி, முன்னாள் அதிபர் கைது

மாலே: மாலத்தீவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி, முன்னாள் அதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் நடக்க வாய்ப்புள்ளதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது மாலத்தீவு. இங்கு 2008ல் நடந்த பொதுத்தேர்தலில் முகமது நஷீத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2012ல் நடைபெற்ற தேர்தலில் நஷீத் தோல்வி அடைந்த நிலையில், அவரது கட்சியை சேர்ந்த அப்துல்லா யாமீன் அதிபரானார்.

ஆட்சியை பிடித்தது முதல் நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது யாமீன் அரசு.

நீதிபதியை கைது செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் நஷீத்துக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் முதுகு வலியால் அவதிப்பட்ட நிலையில், கடந்த 2016ம் ஆண்டு சிகிச்சைக்காக இங்கிலாந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

இங்கிலாந்து அரசு நஷீத்துக்கு தஞ்சம் அளித்த நிலையில் அங்கேயே அவர் தங்கி விட்டார். இந்நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள் போடப்பட்டதாக கூறி, நஷீத் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் விடுதலை செய்யுமாறு மாலத்தீவு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



ஆளும் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ள 12 எம்பிக்கள் மீதான பதவிப்பறிப்பை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த எம்பிக்கள் எதிர்க்கட்சியுடன் சேர்ந்துள்ளதால் அதிபர் யாமீன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த அதிபர் யாமீன் மறுத்துவிட்டார். அதிருப்தி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நுழைவதை தடுக்கும் வகையில், நேற்று அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது.

இதையும் மீறி உள்ளே நுழைந்த 2 எம்பிக்கள் கைது செய்யட்டனர். இந்நிலையில், மாலத்தீவில் அசாதாரண சூழல் நிலவுவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



இது, 15 நாட்கள் அமலில் இருக்கும் என்பதால், அரசின் முழு கட்டுப்பாடும் அதிபரின் வசம் வந்துள்ளது. இந்நிலையில், மாலத்தீவு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சையது, நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, மாலத்தீவின் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போதைய அதிபர் யாமீனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் அதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்க முக்கிய இடங்களில் போலீசார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு நட்பு நாடாக மாலத்தீவு விளங்கி வருகிறது.

இங்கு அரசியலில் குழப்பம் ஏற்படும்போதெல்லாம் இந்தியா தலையிட்டு தீர்வு காணுவது வழக்கம்.

இதேபோல், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அங்குள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை