கோஹ்லி தன்னம்பிக்கையும், டோனி ஐடியாவும் தருகின்றனர்: கேப்டன், நிர்வாகத்தின் ஆதரவால் அச்சமின்றி பந்து வீச முடிகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோஹ்லி தன்னம்பிக்கையும், டோனி ஐடியாவும் தருகின்றனர்: கேப்டன், நிர்வாகத்தின் ஆதரவால் அச்சமின்றி பந்து வீச முடிகிறது

செஞ்சுரியன்: இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற, 2வது ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா 32. 2 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காயா ஜோண்டோ மற்றும் டுமினி தலா 25 ரன்கள், ஹசீம் அம்லா 23 ரன்கள் எடுத்தனர்.

சஹால் 8. 2 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து (ஒரு மெய்டன்) 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 6 ஓவர்கள் பந்து வீசி 20 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 பின்னர் பேட் செய்த இந்தியா 20. 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக மிக எளிதாக வெற்றி பெற்றது.

ஷிகார் தவான் 51 ரன்கள், கேப்டன் விராட் கோஹ்லி 46 ரன்கள் விளாசினர். இவர்கள் இருவரும் ஆட்டமிழக்கவில்லை.

ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை ரபாடா கைப்பற்றினார்.

6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. முன்னதாக முதல் போட்டியிலும் இந்தியா எளிதாக வெற்றி பெற்றிருந்தது.



 ஆட்ட நாயகன் விருது வென்ற சஹால் கூறுகையில், ‘’விக்கெட்களை வீழ்த்த முயல்கிறேன். இதற்காக பந்தை ‘ப்ளைட்’ செய்கிறேன்.

இது சிக்சருக்கும் கூட செல்லும் என்பது எனக்கு தெரியும். ஆனால் கேப்டனும், அணி நிர்வாகமும் அளிக்கும் ஆதரவு, அதை செய்வதற்கான நம்பிக்ைகயை அதிகரிக்க செய்யும்.

இதை விட ‘ப்ளாட்டர் விக்கெட்களை’ கொண்ட பெங்களூருவில் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளேன். பேட்ஸ்மேன்களை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருந்தால் சிறப்பாக விளையாட முடியாது.

விக்கெட்களை வீழ்த்துவதுதான் எனது பலம். அதனால்தான் நான் அணியில் இருக்கிறேன்.



நானோ அல்லது குல்தீப் யாதவோ பந்து வீச வரும் போதெல்லாம், விக்கெட்களை வீழ்த்துவதை பற்றிதான் யோசிப்போம். மிடில் ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்துவதற்கானதான் நாங்கள் அணியில் உள்ளோம்.

10 ஓவர்களில் 65-70 ரன்களை கொடுப்பதை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் நாங்கள் 2-3 விக்கெட்களை வீழ்த்தினால், அணிக்கு அது அதிகம் உதவி செய்யும் என்பதே எங்களின் பார்வை.

நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தினால், எதிரணி அழுத்தத்திற்கு உள்ளாவதை நீங்கள் காண முடியும்.

தென் ஆப்ரிக்காவில் உள்ள ஆடுகளங்களை பற்றியோ, சூழ்நிலைகளை பற்றியோ நாங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை.

எங்களது பந்தில் 2, 3 சிக்சர்கள் சென்று விட்டால் கூட, விராட் கோஹ்லி கூறும் வார்த்தைகள் தன்னம்பிக்கை அளிக்கும். இதன் மூலம் கவலையின்றி பந்து வீச முடியும்.

ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்து மஹி பாய் (டோனி) எப்போதும் ஆலோசனைகளை சொல்லி கொண்டே இருப்பார். பேட்ஸ்மேன் எதை செய்ய முயற்சிக்க போகிறார்? என்பது அவருக்கு தெரியும்.

இது எங்களது பணியை எளிதாக்கி விடுகிறது’’ என்றார்.   இரு அணிகள் இடையேயான 3வது ஒரு நாள் போட்டி, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில், வரும் 7ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 4. 30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் வெளிநாட்டில் ‘பாஸ்’

மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சஹாலும், குல்தீப் யாதவும் இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்தினர்.

இதனால் ஒரு நாள், டி20 என நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணிக்கு பதிலாக நிரந்தர இடத்தை தங்கள் வசப்படுத்தினர். அவர்கள் தென் ஆப்ரிக்காவில் விளையாடுவது இதுவே முதல் முறை.

எனினும் இங்கும் அவர்களின் விக்கெட் வேட்டை தொடர்கிறது.

தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் இந்த கூட்டணி 2 போட்டிகளில், 13 விக்கெட்களை (சஹால் 7, குல்தீப் யாதவ் 6) வீழ்த்தியுள்ளது.

34. 2 ஓவர்களை வீசியுள்ள அவர்கள் (சஹால் 18. 2 ஓவர்கள், குல்தீப் யாதவ் 16 ஓவர்கள்) 121 ரன்களை (சஹால் 67, குல்தீப் யாதவ் 54 ரன்கள்) மட்டுமே விட்டு கொடுத்துள்ளனர். சஹால் 3. 65, குல்தீப் யாதவ் 3. 37 என அவர்களின் எகானமி ரேட்டும் சிறப்பாகவே உள்ளது.


.

மூலக்கதை