பாஜ கூட்டணியில் விரிசல் உத்தவ் தாக்ரேவுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ கூட்டணியில் விரிசல் உத்தவ் தாக்ரேவுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

புதுடெல்லி: பாஜவுடன் அதிருப்தி நிலவிவரும் நிலையில், கூட்டணியில் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேயுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றுள்ளது. சமீபகாலமாக, ஆந்திர அரசை, அம்மாநில பாஜ தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வதால், முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்துள்ளார். கூட்டணியை பாஜ முறித்து கொண்டாலும் கவலையில்லை என்று அவர் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிய நிலையில், தெலுங்கு தேசம்-பாஜ கூட்டணியில் விரிசல் அதிகமானது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் ஏற்பட்ட இந்த விரிசல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், பாஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் அதிருப்தியில் உள்ளது.

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிடப்போவதாக அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே சமீபத்தில் அறிவித்தார். இவ்வாறு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது பாஜவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சூழலில், உத்தவ் தாக்ரேயை தொடர்பு கொண்டு நேற்று சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். பாஜவுடனான கூட்டணியை தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.

இந்நிலையில், பாஜவை கடுமையாக எதிர்த்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்ரேயுடன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளும் பாஜவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கடும் சவாலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


.

மூலக்கதை