‘பத்மாவத்’ படத்துக்கு எதிரான போராட்டம் வாபஸ்: கர்னி சேனா திடீர் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பத்மாவத்’ படத்துக்கு எதிரான போராட்டம் வாபஸ்: கர்னி சேனா திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, கர்னி சேனா அமைப்பு கூறியுள்ளது. ராஜ்புத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக ‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. கர்னி சேனா அமைப்பினரின் தொடர் போராட்டத்தால் வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது.

எனவே, படத்தை குறிப்பிட்ட தேதியில் திரையிட முடியவில்லை. இந்நிலையில், பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

கடந்த 25ம் தேதியன்று, ‘பத்மாவத்’ படம் திரைக்கு வந்தது.

கர்னிசேனா அமைப்பின் எதிர்ப்பால், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், பத்மாவத் படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கர்னி சேனா அமைப்பு திடீரென அறிவித்துள்ளது. ராஜபுத்ர வம்சத்தையும், ராணி பத்மாவதியின் வாழ்க்கையையும் பெருமைப்படுத்துவதாக இந்த படம் உள்ளதாக கர்னி சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்தை திரையிட ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாகவும் கர்னி சேனா கூறியுள்ளது.

இதன்மூலம் பெரிய அளவில் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.   

.

மூலக்கதை