தமிழக அரசுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக அரசுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

புது டெல்லி: தமிழக அரசுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கில், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது  என சுப்ரீம் கோர்ட் மறுத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில அரசு தனியாக சட்டம் இயற்றும் அதிகாரங்கள் குறித்து விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து  கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் முழுமையாக தடை விதித்ததுஇந்தத் தடைக்கு  எதிராகவும்,  ஜல்லிக்கட்டுவை நடத்தவும்   கடந்த 2017-ம் ஆண்டு,  ஜனவரி 8ம் தேதி  ஜல்லிக்கட்டுவிற்கு ஆதரவாக  மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை சென்னை மெரினாவில் நடத்தினர்.
இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சென்னை மட்டுமல்லாது மதுரை, கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் தெருவில் இறங்கிப் போராடினர்.



இளைஞர்கள் கைகளில் இருந்த போராட்டம் அதன் பிறகு  பெரும் மக்கள் போராட்டமாக வெடித்தது. தமிழகம் தாண்டி உலகம் முழுவதிலுள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டுவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கவும் இந்தப் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தினை பெற்றது.

தமிழர்களின் அடையாளங்கள், பண்பாடு, கலாச்சாரங்களை அழிக்கும் முயற்சி என மத்திய அரசு மீது தமிழக மாணவர்கள் குற்றச் சாட்டு வைத்ததும் மத்திய அரசு பணிந்தது. அதன் பிறகு  ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த ஜனவரி 20ம் தேதி ஜனாதிபதி ஒப்புதலுக்கு ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.

அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. அவசர சட்டத்தைத் தொடர்ந்து ஜனவரி 22 ல் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.



அதன் பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில்  நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த பீட்டா அமைப்பு இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தமிழக அரசும் இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்  கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் இன்று காலையில் நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடையில்லை. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான  வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்று நீதிபதி அறிவித்தார்.

இதனால், 5 நீதிபதிகள் யார் இந்த வழக்கை விசாரணை நடத்துவார்கள் என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார். இன்று ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்படும் என்று பீட்டா அமைப்பு எதிர்பார்த்தது.

ஆனால் தடை விதிக்கப்படாதது, அந்த அமைப்பு எடுத்த முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை