தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி: ரஹானேவின் டெக்னிக் சிறப்பாக உள்ளது மனதில் சந்தேகம் இல்லாமல் விளையாடுகிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி: ரஹானேவின் டெக்னிக் சிறப்பாக உள்ளது மனதில் சந்தேகம் இல்லாமல் விளையாடுகிறார்

டர்பன்: இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் ஒரு நாள் போட்டி டர்பனில் நேற்று பகல்/இரவாக நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது.

கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் 120 ரன்கள் (112 பந்துகள், 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, கிறிஸ் மோரிஸ் 37, குயிண்டன் டி காக் 34 ரன்கள் எடுத்தனர். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் பந்து வீசி 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டும், சஹால் 10 ஓவர்கள் பந்து வீசி 45 ரன் மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அத்துடன் பும்ரா, புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
 
 பின்னர் பேட் செய்த இந்தியா 45. 3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோஹ்லி 112 (119 பந்துகள், 10 பவுண்டரி), ரஹானே 79, ஷிகார் தவான் 35 ரன்கள் விளாசினர்.

டோனி 4, ஹர்திக் பாண்டியா 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெலுக்வாயோ 2, ேமார்னே மோர்கல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில், வரும் 4ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறுகிறது.
 வெற்றி குறித்து இந்திய கேப்டனும், ஆட்ட நாயகன் விருது வென்றவருமான விராட் கோஹ்லி கூறுகையில், ‘’இந்த வெற்றி சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில் ஒரு தொடரின் முதல் போட்டி என்பது எப்போதுமே முக்கியத்துவம் நிறைந்தது.

ஜோஹன்னஸ்பர்க் டெஸ்ட் வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையை (டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றது) டர்பன் கொண்டு வந்து நன்றாக விளையாட வேண்டும் என விரும்பினோம்.

ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் எங்களுக்கு தேவைப்பட்டது. அதை ஜிங்க்ஸ் (ரஹானே) சிறப்பாக செய்தார்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். அவரது டெக்னிக் நன்றாக உள்ளது.

அவரது மனதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் மிகவும் பாசிட்டிவ்வாக பேட்டிங் செய்தார்.

(விராட் கோஹ்லி-ரஹானே ஜோடி 3வது விக்கெட்டிற்கு 189 ரன்கள் சேர்த்தது). அவருக்கு எனது பாராட்டுக்கள்.



நான் தென் ஆப்ரிக்க மண்ணில் இதற்கு முன்பாக ஒரு நாள் போட்டிகளில் சதம் விளாசியதில்லை. தற்போது முதல் சதத்தை விளாசியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

குல்தீப் யாதவ், சஹால் ஆகிய 2 விரிஸ்ட் ஸ்பின்னர்களின் பந்து வீச்சும் அற்புதமாக இருந்தது. அணிக்காக இருவரும் கடுமையாக உழைக்கின்றனர்.

அவர்கள் தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடுவது இதுவே முதல் முறை. ஆனால் மிகவும் துணிவாக உள்ளனர்’’ என்றார்.

நலமாக உள்ளேன்:  தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 7வது ஓவரில் ஹசீம் அம்லா பவுண்டரி நோக்கி அடித்த பந்தை, விராட் கோஹ்லி பாய்ந்து விழுந்து பிடித்தார்.

அப்போது அவரது இடது காலின் முட்டி, தரையில் பலமாக இடித்தது.

வலியால் துடித்த அவர் களத்தை விட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார். பின்னர் 21வது ஓவரில் மீண்டும் களம் திரும்பி, பீல்டிங் செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘’இந்த மைதானத்தின் அவுட் பீல்டு எனக்கு சற்று அபாயகரமானதாக இருந்தது. எனினும் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருப்பதை நான் விரும்பவில்லை.

எப்போதும் எனது பங்களிப்பை வழங்குவதையே விரும்புகிறேன். தற்போது நான் நலமாக உள்ளேன்’’ என்றார்.

அனைத்தையும் முயற்சி செய்தும் முடியவில்லை: டூ பிளஸ்ஸிஸ் புலம்பல்
தோல்வி குறித்து தென் ஆப்ரிக்க கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் கூறுகையில், ‘’இந்தியாவின் பேட்டிங் லைன் அப் மிகவும் வலுவாக உள்ளது.

பீல்ட் ப்ளேஸ்மெண்ட்ஸ் மற்றும் யுக்திகள் மூலமாக அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் எதற்கும் பலன் கிடைக்கவில்லை.

விராட் கோஹ்லியும், ரஹானேவும் நன்றாக பேட்டிங் செய்து விட்டனர். நிச்சயமாக நாங்கள் போதுமான ஸ்கோரை எடுக்கவில்லை.

50-70 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்பதே எனது கணக்கீடு. எங்களது பேட்டிங் ஏமாற்றமளிக்கிறது’’ என்றார்.

சேஸிங் கிங் கோஹ்லி
* ஒரு நாள் போட்டிகளில், விராட் கோஹ்லி தனது 33வது சதத்தை விளாசியுள்ளார்.

சேஸிங்கின் போது மட்டும் கணக்கிட்டால், இது அவரது 20வது சதமாகும்.
* இதுவரை 9 நாடுகளின் மைதானங்களில் விராட் கோஹ்லி விளையாடியுள்ளார்.

இதில், தென் ஆப்ரிக்க மண்ணில் மட்டும்தான், ஒரு நாள் போட்டிகளில் அவர் சதம் விளாசாமல் இருந்து வந்தார். அந்த குறையையும் முதல் போட்டியில் அவர் நிவர்த்தி செய்து விட்டார்.

தான் விளையாடிய 9 நாடுகளிலும், ஒரு நாள் போட்டிகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் விராட் கோஹ்லி.
* ரஹானே தான் கடைசியாக விளையாடிய 5 ஒரு நாள் போட்டிகளில் அரை சதம் விளாசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளில் முறையே 55, 70, 53, 61 ரன்களை விளாசியிருந்த அவர், நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 79 ரன்களை ஸ்கோர் செய்தார். இதற்கு முன்பாக இந்திய அணிக்காக இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் சச்சின் டெண்டுல்கரும், விராட் கோஹ்லியும் மட்டுமே (2 முறை).

ரோகித் சர்மாவின் சோகம் தொடர்கிறது. . .
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில், ரஹானேவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த ரோகித் சர்மா குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடவில்லை.

4 இன்னிங்ஸ்களில் 78 ரன்களை மட்டுமே அவரால் ஸ்கோர் செய்ய முடிந்தது. இந்திய துணைக்கண்ட மைதானங்களில் பந்து வீச்சாளர்களை ஒரு கை பார்த்து விடும் ரோகித் சர்மா, தென் ஆப்ரிக்காவில் தடுமாறுவது ஏன்? என கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் குரல் எழுப்பினர்.

ரஹானேவை சேர்க்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோளும் விடுத்தனர். ஆனால் கேப்டன் விராட் கோஹ்லி அசைந்து கொடுக்கவில்லை.

கரண்ட் பார்ம் அடிப்படையில்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற காரணத்தை கூறி ரோகித் சர்மாவை தொடர்ந்து விளையாட வைத்தார்.

எனினும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வேறு வழியின்றி ரஹானே, அணியில் சேர்க்கப்பட்டார்.

அந்த டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களில் 57 ரன்களை ரஹானே எடுத்தார்.   தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலும் 79 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார் ரஹானே. கேப்டன் விராட் கோஹ்லியுடன் 3வது விக்கெட்டிற்கு அவர் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் (189 ரன்கள்) தென் ஆப்ரிக்காவின் கையில் இருந்த வெற்றியை தட்டிப்பறித்து இந்தியாவிடம் கொடுத்தது.

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மாவோ 20 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையை கட்டினார். தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரு நாள் போட்டிகளிலும் அவரது தடுமாற்றம் தொடர்கிறது.



தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மாவின் சராசரி 13. 25 மட்டுமே. 2 அல்லது அதற்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்களை விளையாடிய நாடுகளில், இதுதான் ரோகித் சர்மாவின் குறைந்தபட்ச சராசரி.

தென் ஆப்ரிக்காவில் விளையாடிய 8 இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மாவின் ஸ்கோர் இதோ. 11, 9, 23, 1, 5, 18, 19, 20.



.

மூலக்கதை