காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக மக்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை: முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக மக்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை: முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேட்டி

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கர்நாடக மக்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை.

இந்நிலையில் காவிரி நீரை தமிழகத்துக்கு எவ்வாறு திறந்து விட முடியும் என கா்நாடக முன்னாள் முதல்வரும், மாநில பாஜ தலைவருமான எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துக்குத் தர வேண்டிய காவிரி நீரைக் கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கோரி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக விவசாயிகள் பிரச்னை தொடர்பாக  டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன்   எடப்பாடி பழனிசாமி  அவசர ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு   காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக பெங்களூருக்கு  டெல்டா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து,  சந்திப்புக்கான நேரம் மற்றும் தேதி ஆகியவை கேட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து,’தமிழக முதல்வர் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றது. அது குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசிய பிறகு முடிவு எடுக்கப்படும்’ என சித்தராமையா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், அம்  மாநில பா. ஜனதா தலைவருமான எடியூரப்பா எம். பி. ,  நிருபர்களிடம் இது குறித்து கூறியதாவது:  காவிரி நீர் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரும், கர்நாடக முதல் அமைச்சரும் ஆலோசனை நடத்தி தீர்வு காணட்டும்.

ஆனால் கர்நாடகாவிலேயே தற்போது தண்ணீர் இல்லை. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது.

இவ்வாறு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார். கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர்  எம். பி. பட்டீல்,’காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லை.

எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது சாத்தியமில்லை.



தமிழக முதலமைச்சர், பெங்களூருவுக்கு வரும்போது அவரிடம் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை பற்றியும், இங்கு நிலவும் சூழ்நிலை பற்றியும் தெளிவாக எடுத்து கூறப்படும்’ எனக் கூறியிருந்த நிலையில்,  முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தரமுடியாது எனக் கூறியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.

.

மூலக்கதை