நடிகர் சஞ்சய்தத் விடுதலையில் விதிமீறல்கள் எதுவும் இல்லை: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகர் சஞ்சய்தத் விடுதலையில் விதிமீறல்கள் எதுவும் இல்லை: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

மும்பை: மும்பையில் கடந்த 93ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு குற்றவாளியாக சோ்க்கப்பட்டார். தடை செய்யப்பட்ட எந்திர துப்பாக்கிகளை அவர் வைத்திருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையை மும்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டும் இந்த தண்டனையை உறுதி செய்தது.

அவர் எரவாடா சிறையில் அடைக்கப்படடார். அவரது நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

புனே எரவாடா சிறையில் வேறு சில கைதிகளும் நன்னடத்தையில் சிறந்து விளங்கிய போதும், சஞ்சய் தத்துக்கு மட்டும் சிறை அதிகாரிகள் உதவி புரிந்துள்ளனர். மாநில அரசு சிறப்பு சலுகை காட்டியுள்ளது.

எனவே அவரை விடுதலை செய்தது தவறு. அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.



இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநில உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த மனுவை நிராகரிக்கிறோம் என உத்தரவிட்டனர்.

இதனால் சஞ்சய் தத் தரப்பு நிம்மதி அடைந்துள்ளது.

.

மூலக்கதை