இந்திய யு-19 அணி மீண்டும் உலக கோப்பை வெல்வதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்: விராட் கோஹ்லி வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய யு19 அணி மீண்டும் உலக கோப்பை வெல்வதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்: விராட் கோஹ்லி வாழ்த்து

டர்பன்: ஐசிசி யு-19 (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதியில் பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

வரும் 3ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி 2000, 2006, 2008, 2012, 2016ம் ஆண்டுகளை தொடர்ந்து 6வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதில், 2000, 2008, 2012 என 3 முறை இந்தியா கோப்பையை வென்றுள்ளது. எஞ்சிய 2 இறுதி போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.



இதில், 2008ம் ஆண்டு உலக கோப்பையை தற்போது சீனியர் அணியின் கேப்டனாக உள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய யு-19 அணி வென்றது. இதுகுறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ‘’இந்திய யு-19 அணி சிறப்பாக விளையாடுவதை பார்ப்பது அற்புதமாக உள்ளது.

நியூசிலாந்து புறப்படுவதற்கு முன்பாக அவர்களுடன் கலந்துரையாடினேன். இந்திய யு-19 அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பானவர்கள்.

2008ம் ஆண்டு இருந்த இந்திய யு-19 அணியை விட தற்போதுள்ள இந்திய யு-19 அணி அதிக நம்பிக்கையுடன் காணப்படுகிறது. இது நல்ல அறிகுறி.

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி அதிக அழுத்தம் நிறைந்தது.

எனினும் இந்திய யு-19 அணி வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர்.

இறுதிபோட்டியில் வெற்றி பெற அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் விளையாடும் போட்டிகளை நாங்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

மீண்டும் இந்திய யு-19 உலக கோப்பையை வெல்வதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்’’ என்றார். நடப்பு தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

லீக் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பது இந்திய யு-19 அணி வீரர்கள் நம்பிக்கையுடன் களமிறங்க உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியும் 3 முறை யு-19 உலக கோப்பையை வென்றுள்ளது. அதிக முறை யு-19 உலக கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில் தலா 3 முறையுடன், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் முதலிடத்தில் உள்ளன.

நாளை மறுநாள் நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில், 4வது முறையாக யு-19 உலக கோப்பையை கைப்பற்றி இந்தியா முதலிடத்துக்கு முன்னேறும்.  
இறுதி போட்டியில் சதம் இந்திய யு-19 அணியின் கேப்டன் பிரித்வி ஷா, நடப்பு உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

எனினும் இதுவரை சதம் விளாசவில்லை. இது குறித்து பிரித்வி ஷாவின் தந்தை பங்கஜ் ஷா கூறுகையில், ‘’கடவுள் விருப்பப்படுகிறார்.

இறுதி போட்டியில் அது நடக்கும்’’ என்றார்.

.

மூலக்கதை