அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியன் கிரிக்கெட்தான் உலகில் மிக சிறந்ததாக விளங்கும்: கங்குலி கணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியன் கிரிக்கெட்தான் உலகில் மிக சிறந்ததாக விளங்கும்: கங்குலி கணிப்பு

கொல்கத்தா: நியூசிலாந்தில் நடைபெற்று வரும் யு-19 உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது குறித்து, இந்திய சீனியர் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த பேட்டி: யு-19 உலக கோப்பையை இந்தியா வெல்லும் என நம்புகிறேன். அவர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

மகத்தான திறமை வாய்ந்த பிரித்வி ஷா, சுப்மான் கில், கமலேஸ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி, இஷான் போரெல் போன்ற வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளை கடந்து இந்தியன் கிரிக்கெட்தான் உலகில் மிக சிறந்ததாக விளங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரையிறுதி போட்டியில், பெங்காலை சேர்ந்த இந்திய யு-19 அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் இஷான் போரெல் 4 விக்கெட்களை வீழ்த்த, பாகிஸ்தான் 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அவரை வெகுவாக பாராட்டிய பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவரான கங்குலி மேலும் கூறுகையில், ‘’சிஏபி-யின் விஷன் 20-20 திட்டத்தின் தயாரிப்புதான் இஷான் போரெல். ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் யு-19 என்பது தொடக்கம்தான்.

இஷான் போரெல் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இஷான் போரெலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிஏபி வழங்கும்’’ என்றார்.

கோஹ்லி ஸ்கோர் செய்தால்  இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு
தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய சீனியர் கிரிக்கெட் அணி, முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது.

இதன்பின் இரு அணிகளும் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் ஒரு நாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று மாலை 4. 30 மணிக்கு தொடங்குகிறது.

இது குறித்து கங்குலி கூறுகையில், ‘’ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், ஒரு நாள் தொடரில் இரு அணிகளுக்கும் 50-50 சதவீத வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்.

தென் ஆப்ரிக்க சூழ்நிலைகளில் வெற்றி பெறுவது எளிதானதல்ல.

தென் ஆப்ரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இல்லாதது (காயம் காரணமாக முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட மாட்டார்) இந்திய அணிக்கு சாதகமான விஷயம். விராட் கோஹ்லி அதிக ரன்களை ஸ்கோர் செய்தால், நிச்சயமாக இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது’’ என்றார்.


.

மூலக்கதை