டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாகிறார்? கம்பீர் கேட்டு கொண்டதால்தான் நாங்கள் ஏலத்தில் எடுக்கவில்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாகிறார்? கம்பீர் கேட்டு கொண்டதால்தான் நாங்கள் ஏலத்தில் எடுக்கவில்லை

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே. கே. ஆர்) அணியின் கேப்டனாக இருந்தவர் கவுதம் கம்பீர். அவரது தலைமையின் கீழ் 2012, 2014ம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை, கே. கே. ஆர்.

வென்றுள்ளது. ஆனால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐபிஎல் 11வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக கவுதம் கம்பீரை, கே. கே. ஆர் தக்கவைக்கவில்லை.

இதனால் கே. கே. ஆர் அணியால் அவர் ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரைட் டூ மேட்ச் (ஆர். டி. எம்) கார்டு முறையிலும் கவுதம் கம்பீர் தக்க வைக்கப்படவில்லை.

இதனால் கவுதம் கம்பீரை 2. 80 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியது.

டெல்லியை சேர்ந்தவரான கவுதம் கம்பீர், 2008, 2009, 2010 என ஐபிஎல் தொடரின் முதல் மூன்று சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகதான் விளையாடினார்.

அதன்பின் 2011-2017 வரை 7 ஆண்டுகளாக கே. கே. ஆர் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் திரும்புகிறார்.

எனினும் கவுதம் கம்பீரை கே. கே. ஆர் அணி ஏலத்திற்கு அனுப்பியது, ஆர். டி. எம் முறையை பயன்படுத்தி அவரை தக்க வைக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.



தன்னை ஏலத்தில் எடுக்க வேண்டாம் என கே. கே. ஆர் அணி நிர்வாகத்தை கவுதம் கம்பீர் கேட்டு கொண்டார் என அதன் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியுள்ளார். டிவிட்டரில் கே. கே. ஆர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: ஏலம், ஆர். டி. எம் என எங்களது திட்டத்தில் கவுதம் கம்பீர் இருக்கதான் செய்தார்.

ஆனால் அதற்கு முன்பாக அவர் எங்களை தொடர்பு கொண்டார். அவருக்கு முன்பாக வேறு சவால்கள் இருந்திருக்கலாம்.

அது என்ன? என்பது எங்களுக்கு தெரியாது. மற்றவர்களின் முன்னேற்றம் அல்லது ஆசைகளுக்கு குறுக்காக எப்போதும் வர மாட்டோம் என நாங்கள் தெரிவித்தோம்.

கே. கே. ஆர் அணிக்காக அவர் விளையாடிய 7 ஆண்டுகள் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 இதனிடையே டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து டெல்லி டேர்டெவில்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா கூறுகையில், ‘’கவுதம் கம்பீர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு திரும்பு வதில் நாங்கள் எப்போதுமே ஆர்வமாகதான் இருந்தோம்.

கடந்த சீசனில் டேவிட் வார்னருக்கு பிறகு கவுதம் கம்பீர்தான் அதிக ரன்களை எடுத்த 2வது வீரர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரரான டேவிட் வார்னர் 14 போட்டிகளில் 641 ரன்களை விளாசினார். 16 போட்டிகளில் 498 ரன்களுடன் இந்த பட்டியலில் கவுதம் கம்பீர் 2வது இடத்தை பிடித்தார்).

அது மட்டுமின்றி அவர் ஒரு நல்ல தலைவர்’’ என்றார்.


.

மூலக்கதை