ஐசிசி யு-19 உலக கோப்பை: 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐசிசி யு19 உலக கோப்பை: 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

கிறைஸ்ட்சர்ச்: ஐசிசி யு-19 (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில், தொடக்கம் முதலே இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே அணிகளை லீக் சுற்றில் மிக எளிதாக வீழ்த்தி, பி பிரிவில் இந்தியா முதலிடம் பிடித்தது (3 போட்டி, 3 வெற்றி, 6 புள்ளி). கால் இறுதி சுற்றில், வங்கதேசத்தை 131 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அரை இறுதிக்கு இந்தியா முன்னேறியது.

பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரை இறுதி போட்டி, கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது.

 டாஸ் வென்ற இந்திய கேப்டன் பிரித்வி ஷா முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தார்.

இதன்பின் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பிரித்வி ஷா-மன்ஜோத் கல்ரா களமிறங்கினர். பாகிஸ்தான் பந்து வீச்சை இருவரும் மிக எளிதாக சமாளித்து ரன்களை சேர்த்தனர்.

முதல் விக்கெட்டிற்கு 15. 3 ஓவர்களில் 89 ரன்கள் சேர்த்து இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த பிரித்வி ஷா 41 ரன்கள் (42 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

சிறிது நேரத்தில் மன்ஜோத் கல்ரா விக்கெட்டையும் இந்தியா பறிகொடுத்தது. அரை சதத்தை நெருங்கி கொண்டிருந்த அவர் 47 ரன்களில் (59 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

இதனால் இந்தியா திடீர் சரிவை சந்தித்தது.

எனினும் பின்னர் வந்த சுப்மான் கில் நேர்த்தியாக விளையாடினார்.

ஆனால் மறுமுனையில் இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து கொண்டே வந்தது. ஹர்விக் தேசாய் 20, ரியான் பராக் 2, அபிஷேக் சர்மா 5 ரன்களில் வந்த வேகத்தில் வெளியேறினர்.

7வது வீரராக களமிறங்கிய அங்குல் ராய் கை கொடுக்க சுப்மான் கில் அதிரடியில் இறங்கினார். 6வது விக்கெட்டிற்கு இருவரும் 67 ரன்கள் சேர்த்தனர்.

45. 2 ஓவர்களில் ஸ்கோர் 233 ரன்களாக உயர்ந்த நிலையில் அங்குல் ராய் ஆட்டமிழந்தார். அவர் 33 ரன்கள் (45 பந்துகள், 4 பவுண்டரி) எடுத்தார்.

பின்னர் வந்த கமலேஸ் நாகர்கோட்டி 1, ஷிவம் மாவி 10, சிவா சிங் 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் நங்கூரம் பாய்ச்சி விளையாடிய சுப்மான் கில் சதம் கடந்தார்.



இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்தது. சுப்மான் கில் 102 (94 பந்துகள், 7 பவுண்டரி), இஷான் போரல் 1 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில், முகமது மூசா 4, அர்ஷத் இக்பால் 3, ஷாகின் ஷா அப்ரிடி 1 விக்கெட் வீழ்த்தினர்.   இதன்பின்னர் சற்றே கடினமான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால் இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ெதாடக்க வீரர்களான முகமது ஜெயித் ஆலம் 7, இம்ரான் ஷா 2 ரன்களிலும், பின்னர் வந்த அலி ஜார்யப் ஆஷிப் 1, அமாத் ஆலம் 4, முகமது தாகா 4 ரன்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் நூல் பிடித்தாற்போல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் 17. 4 ஓவர்களில் வெறும் 37 ரன்களுக்கே 5 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் திணறியது.

நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோகைல் நசீர் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 18. 4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் என பாகிஸ்தான் தோல்வியின் பிடியில் சிக்கியது.

7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சாத் கான்-கேப்டன் ஹசன் கான் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சி செய்தனர். ஆனால் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் செட்டில் ஆக கூட இந்திய பந்து வீச்சாளர்கள் விடவில்லை.

ஸ்கோர் 45ஆக மட்டுமே உயர்ந்திருந்த நிலையில், கேப்டன் ஹசன் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.   அடுத்து வந்த ஷாகின் ஷா அப்ரிடி டக் அவுட்டானார்.

சாத் கான் 15 ரன்களிலும், அர்ஷத் இக்பால் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் 29. 3 ஓவர்களில் 69 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இந்தியா, இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா தரப்பில், இஷான் போரல் 4, சிவா சிங், ரியான் பராக் தலா 2, அங்குல் ராய், அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சுப்மான் கில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

 முன்னதாக முதலாவது அரை இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறி விட்டது.

வரும் 3ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

.

மூலக்கதை