உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?

தினமலர்  தினமலர்
உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?

உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, போட்டியிடுவது தொடர்பாக, தினகரன் ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, ஆளுங்கட்சி தரப்பில் முனைப்பு காட்டப்படுகிறது.இந்த தேர்தலில், தங்கள் ஆதரவாளர்களை, கவுன்சிலர், நகராட்சி தலைவர், மேயர் போன்ற பதவிகளில் அமர செய்யவும், அதன் மூலமாக, கட்சியை பலப்படுத்தவும், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் முடிவு செய்துள்ளனர்.

தி.மு.க.,வும், உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகிறது. அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின், பிப்ரவரி மாதம், மண்டல வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அதேபோல, த.மா.கா., தலைவர், வாசனும், உள்ளாட்சி தேர்தலிலாவது, தன் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என, பார்க்கிறார். அதற்காக, உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, பிப்ரவரியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளார்.

நடிகர் கமலும், பொது மக்களின் ஆதரவை திரட்ட, ஜன., 26ல், சுற்றுப்பயணம் துவக்குகிறார். இந்நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன், உள்ளாட்சித் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெற, மிகப்பெரிய கூட்டணி திட்டம் வகுத்துள்ளார்.

இது குறித்து, தினகரன் வட்டாரங்கள் கூறியதாவது:சமீபத்தில், பெங்களூரு சிறையில், சசிகலாவை சந்தித்து பேசிய போது, தனிக்கட்சி துவக்குவது, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதித்துள்ளார்.பொங்கல் விழாவை ஒட்டி, புதுச்சேரியில் உள்ள, தன் பண்ணை வீட்டில் தங்கியிருந்த தினகரன், டில்லி காங்கிரஸ் தலைவர்கள் சிலரை தொடர்பு கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து, தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சி களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

மூலக்கதை