'கால்டாக்சி' ஓட்டுனர் தற்கொலை கிண்டியில் சாலை மறியல்

தினமலர்  தினமலர்
கால்டாக்சி ஓட்டுனர் தற்கொலை கிண்டியில் சாலை மறியல்

பரங்கிமலை : 'கால்டாக்சி' ஓட்டுனர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய காரணமானோர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, ஓட்டுனர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர், முத்துக்குமார், 27. இவர், சென்னை, செவ்வாய்பேட்டையில் தங்கி, 'உபர்' கால்டாக்சி நிறுவனத்தில், தன் காரை சேர்த்து, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார்.சமீபத்தில், சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள, காவல் உதவி மையத்தின் மீது முத்துக்குமாரின் கார் மோதியதாக வழக்கு பதிந்த போலீசார், காரை பறிமுதல் செய்து உள்ளனர்.முத்துக்குமார், தன் காரை மீட்பது தொடர்பாக, கால்டாக்சி நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார். இதில், காரை மீட்க உதவி செய்யாததால், முத்துக்குமாருக்கும், அந்நிறுவன ஊழியருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், 17ம் தேதி, செவ்வாய்பேட்டையில், ரயில் முன் பாய்ந்து, முத்துக்குமார் தற்கொலைக்கு முயன்றார்.இதில், இரண்டு கால்களும் துண்டான நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, நேற்று முன்தினம் பலியானார்.இதனால், ஆத்திரமடைந்த கால்டாக்சி நிறுவன கார் ஓட்டுனர்கள்,முத்துக்குமாரை தற்கொலைக்கு துாண்டிய, கால்டாக்சி நிறுவன ஊழியர் மற்றும் விமான நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆலந்துாரில் உள்ள கால்டாக்சி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.பின், முத்துக்குமார் சடலத்துடன், சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை கைது செய்த போலீசார், மண்டபத்தில் அடைத்தனர்.மதியம், 2:00 மணிக்கு, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே, மற்றொரு பிரிவு கால்டாக்சி ஓட்டுனர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் கைது செய்த போலீசார், மண்டபத்தில் அடைத்தனர்.மாலையில், ஓட்டுனர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மூலக்கதை