பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா

தினமலர்  தினமலர்
பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா

புதுடில்லி: ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துள்ளார். விமானப் படையின் போர் விமானத்தின் பெயர், சுகோய். இதில், நிர்மலா பயணம் செய்ய விரும்பினார். இதில், போர் விமானிகள் மட்டுமே பயணிப்பர்.

இந்த குட்டி விமானம், மணிக்கு, 1,200 கி.மீ., வேகத்தில் பறக்கும். பயணியர் விமானத்தின் வேகம், 700 கி.மீ., மட்டுமே.இந்த விமானத்தில் பறப்பதற்காக, மூன்று நாட்கள் பயிற்சியும், ராணுவ அமைச்சருக்கு கொடுக்கப்பட்டது. 'வெறும், 20 நிமிடங்கள் பறந்தால் போதும்; அதிக நேரம் வேண்டாம்' என, ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்து விட்டாராம் அமைச்சர்.

'நான் விமானத்தில் செல்வதால், விமானப் படை வீரர்களுக்கு ஊக்கம் வரும்' என்றாராம். இதனால், 40 நிமிடங்கள் விமானத்தில் பறந்தாராம், நிர்மலா.

விமானம், 45 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, குட்டிக் கரணம் அடித்த போது, தன் பெற்றோரையும், தனக்கு ராணுவ அமைச்சராக வாய்ப்பளித்த, பிரதமர் மோடியையும் நினைத்துக் கொண்டாராம் நிர்மலா. 'சுகோய்' விமானத்தில் பறந்த, முதல் பெண் அமைச்சர் இவர் தான்.

குடியரசு தினத்தன்று, டில்லி ராஜபாதையில் அணிவகுப்பு நடக்கும். அனைத்து மாநிலங்களும், தங்கள் வளர்ச்சியை அலங்கார ஊர்திகள் மூலம், இந்த அணிவகுப்பில் காட்டுவது வழக்கம். ராணுவ அமைச்சருக்கு தான், இங்கு முதல் மரியாதை. அவர் தான், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அதிபர்களை வரவேற்பார்.

'இந்த சமயத்தில், நீங்கள் சல்வார் அணிவது தான் சரி' என, நிர்மலாவிற்கு சொல்லப்பட்டதாம்; அதை மறுத்து, 'பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன்' என, சொல்லி விட்டாராம், நிர்மலா.

மூலக்கதை