'பயங்கரவாதிகளின் புகலிடங்களை பாக்.,கில் ஒழித்து கட்ட வேண்டும்'

தினமலர்  தினமலர்
பயங்கரவாதிகளின் புகலிடங்களை பாக்.,கில் ஒழித்து கட்ட வேண்டும்

நியூயார்க்:'பயங்கரவாதிகளில், நல்லவன், கெட்டவன் என, வித்தியாசப்படுத்தி பார்க்கும் மனப்பான்மையை, பாக்., மாற்ற வேண்டும்.

'பாக்.,கில் உள்ள பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும் புகலிடங்களை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், ஒழித்துக்கட்ட வேண்டும்' என, இந்தியா வலியுறுத்தி உள்ளது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கான துாதர், சையது அக்பருதீன் கூறியதாவது:ஆப்கானிஸ்தானில், அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, செழிப்பு ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை, பிராந்திய, சர்வதேச நட்பு நாடுகளுடன் சேர்ந்து செயல்படுத்துவதில், இந்தியா உறுதியாக உள்ளது.

ஆப்கனில் அமைதி ஏற்படுவதற்கு, ஆதரவு குரல் எழுப்பினால் மட்டும் போதாது. பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும், அண்டை நாடான, பாக்.,கில் இருந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதனால், ஆப்கனுக்கு ஏற்படும் தீமைகளை தடுப்பதில், நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி, 2015 டிசம்பரில், ஆப்கன் சுற்றுப்பயணத்தின் போது, பயங்கரவாதிகளை ஒழித்து கட்டுவதற்கான தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில், பாக்.,கிற்கும் சென்று வந்தார்.
துரதிருஷ்டவசமாக, இந்த பயணங்களுக்கு பின், 2016 ஜனவரியில், பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில், பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரங்கேற்றப்பட்டது.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள், பயங்கரவாதிகளில், நல்லவன், கெட்டவன் என, வித்தியாசப்படுத்தி பார்க்கின்றனர். அவர்கள், அமைதியை விரும்பாதவர்கள். இந்தியாவை சுற்றியுள்ள பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தி, வருங்காலத்தை பிரகாசமாக வடிவமைப்பதில், அவர்களுக்கு ஆர்வம் கிடையாது; இந்த மனப்பான்மையை, பாக்., அதிபர் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பாக்.,கில் உள்ள, பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும் பகுதிகளை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், ஒழித்துக்கட்ட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால், ஆப்கனில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை