எங்களை போன்றோர் பேசாமல் இருப்பது நல்லது : செல்லூர் ராஜு

தினமலர்  தினமலர்
எங்களை போன்றோர் பேசாமல் இருப்பது நல்லது : செல்லூர் ராஜு

மதுரை: ''ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு, ஆளாளுக்கு கருத்து சொல்வது தவறு. விசாரணை கமிஷன் முடியும் வரை எங்களை போன்றோர் பேசாமல் இருப்பது நல்லது,'' என அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: பஸ் கட்டண உயர்வை முதல்வர் மனமுவந்து ஏற்கவில்லை. அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால், கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் இதை வைத்து அரசியல் செய்யலாம்.தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. எனவே பஸ் கட்டணத்தை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இன்றைய நிலையில் ஒரு ரூபாய் பிச்சை போட்டால், பிச்சைக்காரர்கள் ஏளனமாக பார்ப்பார்கள். எனவே இந்த கட்டண உயர்வு ஏற்றம் அல்ல.ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடந்து வருகிறது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு ஆளாளுக்கு கருத்து சொல்வது தவறு. விசாரணை கமிஷன் முடியும் வரை எங்களை(அமைச்சர்கள்) போன்றோர் பேசாமல் இருப்பது நல்லது, என்றார்.

உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயகுமார், ''வெயிலில் முகம் காட்ட தயங்குபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர்,'' என நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் கட்சி துவங்க உள்ளதை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். மேலும் அவர் பேசுகையில், ''மக்கள் ஏற்பார்களா என்பது அவர்கள் வந்த பின்னர் தான் தெரியும். வெயில்படாமல் வாழ்பவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமம்,'' என்றார்.

மூலக்கதை