குப்பை!அதிகாரிகளுக்கு "வரம்' பொதுமக்களுக்கு "சாபம்'

தினமலர்  தினமலர்
குப்பை!அதிகாரிகளுக்கு வரம் பொதுமக்களுக்கு சாபம்



திருப்பூர்:திடக்கழிவு மேலாண்மையில், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால், திருப்பூர் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் குப்பைகளே தென்படுகின்றன. ஊரே நாற்றமெடுத்தாலும், தீர்வு காண வேண்டிய அதிகாரிகளின் தூக்கம் இன்னமும் கலையவில்லை.

திருப்பூரில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் தினமும், 550 டன் குப்பை சேகரமாகிறது. அவற்றை சேகரித்தல், மறு சுழற்சிக்கு பயன்படுத்துதல், உரம், மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம், மாநகராட்சியில் பெயரளவுக்கே உள்ளது. தினமும் குப்பை சேகரிக்கப்பட்டு, கல்குவாரி குழிகளில் கொட்டப்படுகிறது.


மாநகராட்சி இரண்டு மற்றும் மூன்றாம் மண்டலங்களில், குப்பை அகற்றும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. ஆனால், மாநகராட்சி பணியை விட, மிக மோசமானதாக, தனியார் நிறுவனத்தின் செயல்பாடு உள்ளது. குறைந்த ஆட்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்துதல்; சேகரிக்கும் குப்பைகள் எடை போடுவதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், அதிகாரிகளுக்கு குப்பையும் "செல்வம்' ஆக மாறியுள்ளது.

குப்பை என்பது, அதிகாரிகளுக்கு வரம் போல் ஆகிவிட, நகர மக்களுக்கோ, சாபக்கேடாக உள்ளது. "நரக' வேதனையை அனுபவிக்கின்றனர். பிரதான ரோடுகள் சிலவற்றில், பெயரவுக்கு குப்பை அகற்றப்படுகிறது. மற்ற பகுதிகளில், மலை போல் தேங்கியிருந்தாலும், கண்டு கொள்ளப்படுவதில்லை. இதனால், துர்நாற்றம், காய்ச்சல் என பல பாதிப்புகள் ஏற்படுகிறது.


தினமும், எவ்வளவு குப்பை அகற்றப்படுகிறது; தனியார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்; எத்தனை வாகனங்கள் இயக்கப்படுகிறது; எங்கு குப்பை செல்கிறது என்பதெல்லாம், "ரகசியம்' காக்கப்படுகிறது.

திடக்கழிவு மேலாண் மை திட்டம் செயல்படுத்தப்படும்; இடுவாயில் குப்பை கிடங்கு; குப்பையில் உரம் தயாரிப்பு, மின்சாரம் தயாரிப்பு என, மாநகராட்சி பட்ஜெட்டில் அலங்கார வார்த்தைகள் இடம் பெறுகிறது.


ஆனால், செயல்பாட்டில் எதுவும் இருப்பதில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், நவீன வாகனங்கள், குப்பை தொட்டிகள் என வாங்கப்படுகிறது; மறுபுறம், உரிய மேலாண்மையின்றி வீணாக்கப்படுகிறது.


ஆண்டு தோறும், சுகாதார பணிக்கு வாகனங்கள், குப்பை தொட்டிகள் பராமரிப்புக்கு மட்டும், மாநகராட்சி நிர்வாகம், 24 கோடி ரூபாய் வரை செலவழிக்கிறது.


மேலும், துப்புரவு பணியாளர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனத்துக்கு, பல கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஆனால், நகரம் தூய்மையாக இருப்பதில்லை. திரும்பிய பக்கமெல்லாம், குப்பை மலை; பிளாஸ்டிக் கழிவுகளே கண்ணில் தென்படுகிறது.


"நிதி'யை பெருக்க வேண்டும் என்பதற்காக, "குப்பை' பெருக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, மாநகர மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இனியாவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் மனம் வைக்க வேண்டும்; குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

மூலக்கதை