ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு

தினமலர்  தினமலர்
ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபா மற்றும் தீபக் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உடல் நலமின்றி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 2016 டிசம்பரில் மரணமடைந்தார். ஜெ.,வின் சகோதரர் ஜெயகுமார்; இவரும் மறைந்து விட்டார். இவரது மகள், தீபா, மகன், தீபக். உயர் நீதிமன்றத்தில், இருவரும் தாக்கல் செய்த மனு:

சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் கேட்டு, தாசில்தாரை அணுகினோம். சான்றிதழ் தர, தாசில்தார் மறுத்து விட்டார். சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சான்றிதழ் பெற்று கொள்ளும்படி பதில் அளிக்கப்பட்டது. எங்களை தவிர, ஜெ.,க்கு சட்டப்பூர்வ வாரிசு, வேறு யாரும் இல்லை; உயில் எதுவும் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெ., விட்டு சென்ற சொத்துக்களை பராமரிக்க, எங்களுக்கு தான் உரிமை உள்ளது.

தங்க நகைகள், அசையும், அசையா சொத்துக்கள் என, 52 கோடி ரூபாய் அளவில் உள்ளன. சொத்து விபரங்களை முழுமையாக கணக்கெடுத்து, ஆறு மாதங்களில், நீதிமன்றத்துக்கு தெரிவிக்கிறோம். சொத்துக்களை முறையாக நிர்வகித்து, ஓராண்டுக்குள் உண்மையான கணக்கு வழக்குகளை அளிக்கிறோம். எனவே, சொத்துக்களை நிர்வகிக்க, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை