டிரம்பின் அறிவாற்றல் பிரமாதம் : அமெரிக்க அரசு டாக்டர் சான்று

தினமலர்  தினமலர்
டிரம்பின் அறிவாற்றல் பிரமாதம் : அமெரிக்க அரசு டாக்டர் சான்று

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், 71, உடல்நிலை பிரமாதமாக உள்ளது; புரிந்து கொள்ளும் அறிவாற்றல் சோதனையில், அவர் சிறப்பாக தேறி உள்ளார்,'' என, வெள்ளை மாளிகை சிறப்பு மருத்துவர், ரான்னி ஜாக்சன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர், டிரம்பின் நினைவுத்திறன், முடிவெடுக்கும் திறன், அறிவாற்றல் ஆகியவை குறைந்து உள்ளதாக, தகவல்கள் வெளியாகின. இதனால், டிரம்பின் உடல் நிலை பற்றி, பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்தன. இந்நிலையில், டிரம்ப், நேற்று, வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். பின், அவரை பரிசோதித்த, வெள்ளை மாளிகை சிறப்பு மருத்துவர், ரான்னி ஜாக்சன், நிருபர்களிடம் கூறியதாவது: அதிபர் டிரம்பின் உடல்நிலை சிறப்பானதாக உள்ளது. புரிந்து கொள்ளும் அறிவாற்றல் சோதனையில், அவர் சிறப்பாக தேறி உள்ளார். மிக ஆரோக்கியமாக உள்ள அவர், அதிபர் பதவிக்கான காலம் முழுவதும் அவ்வாறே திகழ்வார்.
புரிந்து கொள்ளும் சோதனையை, தன்னிடம் நடத்தும்படி, மருத்துவர்களிடம், டிரம்ப் கேட்டுக் கொண்டார். சட்டப்படி, அந்த சோதனையை அதிபரிடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அவர் கேட்டுக் கொண்டதால், புரிந்து கொள்ளும் திறன் சோதனை நடத்தப்பட்டது. இதில், 30க்கு, 30 மதிப்பெண் பெற்று, சிறப்பான தேர்ச்சியை டிரம்ப் அடைந்துள்ளார்.
புரிந்து கொள்வதில், டிரம்பிடம் எவ்வித குறைபாடுகளையும், நான் காணவில்லை. டிரம்ப், மிகவும் புத்திக்கூர்மையாக உள்ளார். என்னிடம் பேசுகையில், தெளிவாக புத்தி சாதுரியத்துடன் பேசினார். 2017 டிசம்பரில், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில், டிரம்ப் பேசுகையில், வாய் குழறியபடி பேசியதாக தோன்றியது. சுவாசம் சீராவதற்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்து, அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

திறமையான தொழிலாளர்களை ஏற்பதில் தயக்கம் இல்லை : 'திறமையானவர்களை, ஆங்கிலம் சிறப்பாக பேசக் கூடியவர்களை, அமெரிக்காவில் வசிக்க அனுமதிப்பதில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு, எந்த பிரச்னையும் கிடையாது' என, அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.வாஷிங்டனில், அமெரிக்க அரசு மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அமெரிக்க நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய திறமையான நபர்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை ஏற்றுக் கொள்வதில், அரசுக்கு தயக்கம் கிடையாது. அவர்கள், சிறப்பான தொழில் திறனுடனும், ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் இருந்தால், அவர்கள் அமெரிக்காவில் வசிக்க எவ்வித தடையும் இருக்காது.
அமெரிக்க மக்கள் நலனை கருதி, குடியேற்ற நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்ய அரசு விரும்புகிறது. தனிநபர்களின் திறன் அடிப்படையில் அவர்களை, அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் நடைமுறை, சிறப்பான பலன்களை அளிப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை