இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா : அசத்தினார் அறிமுக வேகம் என்ஜிடி

தினகரன்  தினகரன்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில் 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, அறிமுக வீரர் லுங்கி என்ஜிடியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 151 ரன்னுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், தென் ஆப்ரிக்கா 2வது இடத்திலும் இருப்பதால் இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. விராத் கோஹ்லி தலைமையில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வந்த இந்திய அணி, முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணிலும் தொடரைக் கைப்பற்றி சாதனை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கேப் டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 72 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று ஏமாற்றமளித்தது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக விளையாடி தோல்விக்கு வழிவகுத்தனர். இந்த நிலையில், தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 335 ரன் குவித்து ஆல் அவுட்டானது. மார்க்ராம் 94, அம்லா 82, கேப்டன் டு பிளெஸ்ஸி 63 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 4, இஷாந்த் 3, ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் இன்னிங்சில் 307 ரன் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் கோஹ்லி அபாரமாக விளையாடி 153 ரன் அடித்தார். விஜய் 46, அஷ்வின் 38 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 28 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 258 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. எல்கர் 61, டி வில்லியர்ஸ் 80, கேப்டன் டு பிளெஸ்ஸி 48, பிலேண்டர் 26 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஷமி 4, பூம்ரா 3, இஷாந்த் 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால், செஞ்சுரியன் டெஸ்டில் வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்துவதுடன் தொடரை கைப்பற்றும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொள்ள இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு உருவானது. எனினும், 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து தடுமாறியது. விஜய் 9, ராகுல் 4, கேப்டன் விராத் கோஹ்லி 5 ரன்னில் ஆட்டமிழந்தது மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்தது. கை வசம் 7 விக்கெட் இருக்க வெற்றிக்கு இன்னும் 252 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில், புஜாரா 11 ரன் மற்றும் பார்திவ் பட்டேல் 5 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். புஜாரா 19 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இவர் முதல் இன்னிங்சில் ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. பார்திவ் பட்டேலும் 19 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் மார்கெல் வசம் பிடிபட்டார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 6 ரன், அஷ்வின் 3 ரன் எடுத்து என்ஜிடி வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 87 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ரோகித் ஷர்மா - முகமது ஷமி ஜோடி 8வது விக்கெட்டுக்கு ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன் சேர்த்தது. ரோகித் 47 ரன் (74 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ஷமி 28 ரன் (24 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்ப, இந்திய நம்பிக்கை முழுவதுமாகத் தகர்ந்தது. உணவு இடைவேளையை ஒத்திவைத்து தொடர்ந்த ஆட்டத்தில், பூம்ரா 2 ரன் எடுத்து என்ஜிடி பந்துவீச்சில் பிலேண்டரிடம் பிடிபட இந்தியா 151 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (50.2 ஓவர்). இஷாந்த் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் அறிமுக வேகம் லுங்கி என்ஜிடி 12.2 ஓவரில் 3 மெய்டன் உட்பட 39 ரன்னுக்கு 6 விக்கெட், ரபாடா 3 விக்கெட் கைப்பற்றினர். தென் ஆப்ரிக்கா 135 ரன் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 21 வயது இளம் வீரர் என்ஜிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க், நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் 24ம் தேதி தொடங்குகிறது. South Africa won by 135 runs

மூலக்கதை