சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் எண்ணிக்கை... அதிகரிப்பு! கூடுதலாக 10 ஆயிரம் பொருத்த போலீசார் நடவடிக்கை

தினமலர்  தினமலர்
சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் எண்ணிக்கை... அதிகரிப்பு! கூடுதலாக 10 ஆயிரம் பொருத்த போலீசார் நடவடிக்கை

குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, சென்னையில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள, 30 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களுடன், கூடுதலாக, 10 ஆயிரம் கேமராக்களை பொருத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான, ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

குற்ற சம்பவங்கள் நிகழும் இடங்களில், முடி, பட்டன், காலணி, கால் தடம், நக கீறலின் போது படிந்த ரத்தம் என, போலீசாருக்கு சிறு தடயங்கள் கிடைத்தால் கூட, குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு, கைது செய்துவிடுவர். அதிலும், குற்ற நிகழ்விடங்களில், கண்காணிப்பு 'கேமரா' இருந்தால், மிக விரைவில், அந்த வழக்கின் குற்றவாளி கைது செய்யப்படுவார்.

குற்றவாளிகள்:
சில தினங்களுக்கு முன், மேற்கு மாம்பலம், ரியல் எஸ்டேட் அதிபர் கந்தன், கொலை வழக்கிலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு, குற்றவாளிகள், விரைந்து கைது செய்யப்பட்டனர். இதற்கு முன், சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில், ராஜஸ்தானைச் சேர்ந்த, பாபு சிங் என்பவர், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன், யானைக்கவுனி போலீசார், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கிஇருந்த, கூலிப்படையினரை கைது செய்தனர்.

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த, மென்பொறியாளர் சுவாதி என்பவர், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். மர்ம நபர், தப்பிச்செல்லும் காட்சிகள், சூளைமேடு பகுதியில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, இந்த கொலை வழக்கில், துப்பு துலக்க, கண்காணிப்பு கேமரா தான் பெரிதும் உதவியாக இருந்தது.

ஏராளமான வழக்குகள்:
பின், நெல்லையைச் சேர்ந்த, ராம்குமார் கைது செய்யப்பட்டார். இதேபோல், கண்காணிப்பு கேமரா உதவியுடன், ஏராளமான வழக்குகளில், போலீசார் துப்பு துலக்கி உள்ளனர். போலீசாருக்கு பெரிதும் கை கொடுப்பதால், சென்னை நகரில் உள்ள, 12 காவல் மாவட்டங்களிலும், 30 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கூடுதலாக, 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: காவல் மாவட்ட வாரியாக, பொருத்தப்பட்டுள்ள, 30 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களையும், ஆய்வு செய்துவிட்டோம். பழுதான ஒரு சில கேமராக்கள், சரி செய்யும் பணி நடக்கிறது. குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உதவியுடன், கூடுதலாக, 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இருள் சூழ்ந்த பகுதிகளில், நள்ளிரவில் திருடக்கூடிய நபர்கள் மற்றும் கோவில் கருவறையில், சிலைகளை திருடுபவர்களின் உருவங்களை, தெளிவாக பதிவு செய்யும், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. சென்னை நகர் முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் மட்டுமே, பலன் கிடைத்துவிடாது. நான்கு திசைகளிலும் பதிவு செய்யும் வகையில், எந்த இடத்தில் பொருத்தினால், குற்றவாளிகளின் உருவம் பதியும் என்பதை மிக நுட்பமாக ஆய்வு செய்து, பொருத்த வேண்டும்.
-பொன். மாணிக்கவேல்ஐ.ஜி., ரயில்வே மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

தி.நகரில் கேமராக்கள் அதிகம்!
காவல் மாவட்டம்- கேமரா எண்ணிக்கைமயிலாப்பூர்- 2002கீழ்ப்பாக்கம்- 972திருவல்லிக்கேணி- 544தி.நகர்- 5635அடையாறு- 4572பரங்கிமலை- 766பூக்கடை- 4515வண்ணாரப்பேட்டை- 2288மாதவரம்- 1349அண்ணா நகர்- 2329அம்பத்துார்- 1527புளியந்தோப்பு- 131

- நமது நிருபர் -

மூலக்கதை