பொங்கலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்களால்ரூ.11 கோடி:மதுரை, திண்டுக்கல், விருதுநகருக்கு வருவாய்

தினமலர்  தினமலர்
பொங்கலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்களால்ரூ.11 கோடி:மதுரை, திண்டுக்கல், விருதுநகருக்கு வருவாய்

திண்டுக்கல்;மதுரை கோட்ட போக்குவரத்து கழகங்களில் பொங்கலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.11 கோடி வருவாய் கிடைத்துள்ளது, என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து கழகம் மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்கள் மூலம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 2 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 11 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, மதுரை கோட்ட போக்குவரத்து கழகங்கள் மூலம் ஜன.12 முதல் ஜன.16 வரை சென்னை, கோவை, சேலம், புதுச்சேரி, நெல்லை, துாத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய ஊர்களுக்கு 600 க்கும் மேல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.ரயில்களில் இடம் கிடைக்காத ஏராளமான பயணிகள் பஸ்களில் பயணம் செய்தனர். இதனால், பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம் மதுரை கோட்டத்திற்கு ரூ.11 கோடி வருவாய் கிடைத்துள்ளது.தொழிலாளர்கள் ஏமாற்றம்போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு போனஸ், பொங்கலுக்கு பண்டிகை இனாம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு பொங்கலுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பண்டிகை இனாம் வழங்க அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஆணை வெளியிட்டது.
போக்குவரத்து தொழிலாளர்கள் 8 நாள் போராட்டத்திற்கு பிறகு பணிக்கு திரும்பியதால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த சென்னை, கோவை, திருச்சி மண்டல போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பொங்கல் இனாம் ரூ.625 யை அரசு ஆணை வெளியிட்ட அன்றும், மறுநாளும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் உடனே செலுத்தப்பட்டது. ஆனால், மதுரை கோட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் இன்னும் பொங்கல் இனாம் வழங்கப்படவில்லை.மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் டிரைவர், கண்டக்டர், அலுவலக பணியாளர்கள் என, 10 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். ஒருவருக்கு ரூ.625 வீதம் ரூ.62.50 லட்சத்தை பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் இந்த மண்டலங்களில் ஒருநாள் கிடைக்கும் வருவாயை வைத்தே வழங்கியிருக்க முடியும். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி இன்னும் வழங்கவில்லை.
போராட்டத்திற்கு பின் பணிக்கு வந்துள்ள தொழிலாளர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.'பொங்கல் இனாம், தீபாவளி போனஸ், கல்வி மற்றும் மருத்துவ பணம் என எந்த பணப்பலன்களும் உடனே கிடைப்பதில்லை. தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், திட்டங்களை போக்குவரத்து கழகங்கள் உடனே செயல்படுத்த வேண்டும்' என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை