பண்ருட்டியில் 29 கண்காணிப்பு கேமராக்கள்... குற்றவாளிகளை கண்டறிவதில் போலீஸ் சிரமம்

தினமலர்  தினமலர்
பண்ருட்டியில் 29 கண்காணிப்பு கேமராக்கள்... குற்றவாளிகளை கண்டறிவதில் போலீஸ் சிரமம்

பண்ருட்டி : பண்ருட்டியில் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்ட 29 கேமராக்கள் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக இருப்பதால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.

பண்ருட்டியில் கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய டி.எஸ்.பி., கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் சிவசுப்பு ஆகியோர் முயற்சியின் பேரில் சட்டம், ஒழுங்கு பிரசனை, திருட்டு போன்ற சம்பவங்களில் குற்றவாளிகள் உடனடியாக கண்டறிவதற்காக முக்கிய இடங்களான, பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு, பி.டி.ஓ., அலுவலகம், போலீஸ் நிலையம், லிங்க்ரோடு, பஸ் நிலையம், தட்டாஞ்சாவடி, சென்னை சாலை என தன்னார்வலர்களின் நிதி மூலம் 5 லட்சம் ரூபாய் செலவில் 29 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டன.

மேலும், நகரம் முழுவதும் கோமராக்கள் பொறுத்த போலீஸ் துறை சார்பில் ஆங்காங்கே கம்பங்கள் நடப்பட்டு கேபிள் இணைப்புகள் கொடுக்கப்பட்டன.அதுமட்டுமின்றி, வங்கிகள், நகைக்கடைகள், ஜவுளி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. போலீஸ் துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் போலீஸ் நிலையத்தில் இருந்து கண்காணிப்பின் மூலம் அடிக்கடி திருட்டு, சட்டம் ஒழுங்கு, விபத்து போன்ற வழக்குகளில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இதனால் ஆங்காங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குற்றங்கள் வெகுவாக குறைந்தன. டி.எஸ்.பி., கிருஷ்ணசாமி உள்ளிட்ட அதிகாரிகள் இடம்மாறிய பின் கண்காணிப்பு கேமராக்களை கண்டுகொள்வதில்லை. பழுதான கேமராக்களை குறித்து சீரமைக்க போலீஸ் அதிகாரிகள் முனைப்பு காட்டாமல் விட்டுவிட்டனர்.

இதனால் நகரில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு முற்றிலும் செயலிழந்து போனது. பல இடங்களில் கேமரா கேபிள் கொண்டு செல்ல வைக்கப்பட்டிருந்த கம்பங்கள் சாய்ந்துள்ளன. வங்கி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் முக்கிய வீதிகளில் தங்களது நிறுவனத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த கேமராக்களும் செயலிழந்துள்ளன.

தற்போது அடிக்கடி நடைபெறும் சட்டம் ஒழுங்கு, குற்ற சம்பவங்களின் போது குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடியாமல் குற்றப்பிரிவு போலீசார் தடுமாறி வருகின்றனர். கேமரா வசதி இல்லாமல் கடந்த 2011ல் ராஜாஜி சாலையில் வட்டிக்கடைக்காரர் சண்முகம் செட்டியார் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி., பிரிவிற்கு வழக்கை மாற்றிய பின்னரும் கூட துப்பு துலங்கவில்லை.

விபத்து, குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு ஆதாரமாக தேவைப்படும் கண்காணிப்பு கேமரா செயல்படவும், புதியதாக பல இடங்களில் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்திடவும் போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை