வார்டு மறுசீரமைப்பில் நிலவும் குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்குமா?ஜன. 31ல் மண்டல அளவில் ஆலோசனை கூட்டம்!

தினமலர்  தினமலர்
வார்டு மறுசீரமைப்பில் நிலவும் குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்குமா?ஜன. 31ல் மண்டல அளவில் ஆலோசனை கூட்டம்!

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், வார்டு எல்லைகளை மக்கள்தொகை அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. அதற்காக, எல்லை மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த, அக்., மாதம் துவங்கிய பணி, டிச., மாதத்தில் நிறைவடைந்தது. வார்டு எல்லை சீரமைப்பு குறித்து, ஆளும் தரப்பு நேரடியாக வழிகாட்டுதல் வழங்கவில்லை. டெங்கு ஒழிப்பு, மழை பாதிப்பு பணிகளுடன், இப்பணியை திறம்பட மேற்கொள்ள இயலவில்லை.
உள்ளாட்சி அமைப்பின் மொத்த மக்கள்தொகையை, வார்டு எண்ணிக்கையால் வகுத்து, வார்டுக்கான மக்கள்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து, 10 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்று நிபந்தனை இருந்தது.வார்டு மறுசீரமைப்பு ஆணையம், ஜாதி ஓட்டு வங்கி அமைவது போல், வார்டில் எல்லை அமையக்கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தியும், அதிகாரிகள் தரப்பு அதை கருத்தில் கொள்ளவில்லை.
வார்டு வரையறை பட்டியல் வெளியான நாளில் இருந்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவிலான, அது குறித்து கடும் ஆட்சேபனை எழுந்தது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை.எல்லை மறுசீரமைப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வார்டு பிரிக்கப்பட்டதால், மனுவின் மீது நடவடிக்கை எடுப்பது சிரமம் என்று மட்டும், அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.
மாவட்ட அளவில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக, வரும், 31ல், மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம், கோவையில் நடைபெறவுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் நடந்துள்ள வார்டு சீரமைப்பு குறித்து, மறுசீரமைப்பு ஆணைய குழு ஆய்வு நடத்தி, ஒப்புதல் அளிக்க உள்ளது.
பொதுமக்கள் மனுக்களின் மீது, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை விவரமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மண்டல ஆய்வின் மூலம், தங்களின் ஆட்சேபனைக்கு தீர்வு கிடைக்குமா என, மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மூலக்கதை