அக்கறையில்லா ஆட்சி; அதற்கு பாலமே சாட்சி!எப்போதோ பணியை முடித்து விட்டது ரயில்வே துறை...நெடுஞ்சாலைத்துறை நிலமே எடுக்கவில்லை இன்று வரை!

தினமலர்  தினமலர்
அக்கறையில்லா ஆட்சி; அதற்கு பாலமே சாட்சி!எப்போதோ பணியை முடித்து விட்டது ரயில்வே துறை...நெடுஞ்சாலைத்துறை நிலமே எடுக்கவில்லை இன்று வரை!

தி.மு..க., ஆட்சிக்காலத்தில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில், 'ரயில்வே கேட்'களுக்குப் பதிலாக, உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டுவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன. பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம், ரயில்வே துறையுடன் போடப்பட்டு, சில பாலங்களுக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டன.

மொத்தம் பத்தாண்டு...!

பல கட்ட போராட்டத்துக்குப் பின், நஞ்சுண்டாபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, பீளமேடு, ரத்தினபுரி, வெள்ளலுார் - சிங்காநல்லுார் ரோடு ஆகிய இடங்களில் மட்டுமே, பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தண்ணீர்ப்பந்தல், ஆவாரம்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, நீலிக்கோணாம்பாளையம் போன்ற நகரின் மிக முக்கியமான பகுதிகளில், இந்த பாலங்கள் கட்டுவதற்கான நிலமே இன்று வரை கையகப்படுத்தப்படவில்லை.இதிலும் குறிப்பிடத்தக்கது, நீலிக்கோணாம்பாளையத்தில் கடவு எண்:5க்குப் பதிலாக, கட்டப்பட வேண்டிய ரயில்வே மேம்பாலமாகும். இங்கு பாலம் கட்டுவதற்கு, 2007 நவ.13ல், 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை (எண்:272) வெளியிடப்பட்டது. பத்தாண்டுகள் கடந்த பின்னும், இன்று வரையிலும் இந்த பாலம் கட்டி முடிக்கப்படவில்லை. இதில், மூன்றரை ஆண்டுகள், தி.மு.க., ஆட்சியும், ஆறரை ஆண்டுகள், அ.தி.மு.க., ஆட்சியும் நடந்துள்ளன.கோவை நகரில், ஆவாரம்பாளையம் உட்பட வேறு சில பகுதிகளில், பாலம் கட்டும் பணி தாமதமானதற்கு, நிலம் எடுத்துத் தராதது தான் காரணமென்று, வருவாய்த்துறை மீது நெடுஞ்சாலைத்துறை குற்றம்சாட்டி வந்தது. ஆனால், இந்த பாலத்தைக் கட்டுவதற்கு, எவ்வளவு நிலம் தேவை என்பதை அளந்து, வருவாய்த்துறைக்கு நெடுஞ்சாலைத்துறை தர வேண்டிய நில ஆர்ஜித பிரேரணையே, இதுவரை தரப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.இதை மறுக்கும் நெடுஞ்சாலைத்துறையினர், 'நஷ்டஈடு வழங்கத் தயாராகவுள்ளோம்; நிலத்தைக் கையகப்படுத்தித் தர வேண்டியது, வருவாய்த்துறையின் பொறுப்பு' என்கின்றனர். ஆனால், நில உரிமையாளர்களிடம் நடக்கும் பேரத்தின் அடிப்படையில், பாலத்தின் வரைபடத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கின்றனர் என்று வருவாய்த்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.நீலிக்கோணாம்பாளையம் முதல் பிருந்தாவன் நகர் வரை, மூன்று கி.மீ., துாரத்தில், ஒரு கி.மீ., துாரத்துக்கு உயர் மட்ட பாலமும், இரண்டு கி.மீ., துாரத்துக்கு அணுகுசாலையும் அமைக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தி, 40 அடி அகலத்தில் ரோடு மற்றும் பாலம் அமைக்க, 58 கோடியே 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணி, இன்னும் முடிந்தபாடில்லை.நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, அப்பகுதி பொதுமக்களுடன் கடந்த வாரம் ஆலோசிக்கப்பட்டது. சிலரிடமிருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இனி, விலை நிர்ணயித்து, பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்கி, இடத்தை கையகப்படுத்த வேண்டும். ஆனால், இரு துறையினரும் இணைந்து, நிலத்தைக் கையகப்படுத்தி, எப்போது பணியைத் துவங்குவார்கள் என்பதற்கு, யாரிடமும் உத்தரவாதமான பதில் இல்லை.அது வேற டிபார்ட்மென்ட்!இரு துறைகளும் உரசிக்கொண்டிருக்கும் நிலையில், இருப்புப் பாதைக்கு மேல், ரயில்வே துறை சார்பில் கட்ட வேண்டிய பாலம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இதிலிருந்தே, மத்திய அரசின் வேகமும், மாநில அரசுக்கு, மக்கள் நலன் மற்றும் நகர வளர்ச்சியின் மீதான அக்கறையும் வெளிப்படையாகத் தெரிகிறது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இழப்பீடாக அதிகபட்ச தொகை வழங்க கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி, நில உரிமையாளர்களிடம் பேசுவோம். விலை இறுதி செய்து, நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, வருவாய்த்துறை செயலருக்கு கோப்பு அனுப்பப்படும். இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், 18 மாதங்களில் பாலம் கட்டி, முடிக்கப்படும்' என்றனர்.முதல்வரின் கையிலுள்ள ஒரு துறையே, இவ்வளவு மெத்தனமாகவும், செயல்பாடின்றியும் இருந்தால், கோவை நகரத்தின் வளர்ச்சி மட்டுமின்றி, மாநிலத்தின் வளர்ச்சியும் என்னவாகும் என்பதை கற்பனை செய்யவே முடியவில்லை. கோவையில் ஆய்வு செய்த கவர்னருக்கு, ரயில்வே கட்டி முடித்த பாலத்தையும், மாநில அரசுத்துறைகளின் மெத்தனத்தால் அரைகுறையாக நிற்கும் அனைத்துப் பாலங்களையும் காட்டியிருந்தாலாவது இதற்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்பதே கோவை மக்களின் ஆதங்கம்.இன்னுமோர் இம்சை!இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இருந்து நீலிக்கோணாம்பாளையம் வரை, 2.5 கி.மீ., துாரத்துக்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு விட்டது. குடிநீர் பிரதான குழாயும் மாற்றப்பட்டு விட்டது. புதிதாக ரோடு போட, ரூ.75 லட்சம் ஒதுக்கி, 'டெண்டர்' விடப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளாகி விட்டது. இன்னும் வேலையை துவக்கவில்லை. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, ரோடு போடும் பணியை துரிதப்படுத்தினால் நல்லது.

மூலக்கதை