ரத்ததானம் குறித்து எஸ்.எம்.எஸ்., அசத்தல் :வழிகாட்டும் மதுரை அரசு மருத்துவமனை

தினமலர்  தினமலர்
ரத்ததானம் குறித்து எஸ்.எம்.எஸ்., அசத்தல் :வழிகாட்டும் மதுரை அரசு மருத்துவமனை

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் கொடையாளர்கள் மூலம் ரத்தசேமிப்பை அதிகரிக்க, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் புதிய சாப்ட்வேரை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் ரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இம்மருத்துவமனையில் பிரசவம், அறுவைசிகிச்சை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, விபத்தில் சிக்குவோர் உட்பட பல்வேறு சிகிச்சைக்கு தேவையான ரத்தம் இங்குள்ள ரத்த வங்கி மூலம் பெறப்படுகிறது. தினமும் இங்கு 40 பிரசவம் நடக்கிறது. இதில், ரத்தம் குறைவாக உள்ள கர்ப்பிணிக்கு வழங்கல் உட்பட பல்வேறு அறுவை சிகிச்சைக்கென ஆண்டுக்கு 40 ஆயிரம் யூனிட் (யூனிட் 350 மில்லி) ரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால், இம்மருத்துவமனையில் ரத்த கொடையாளர் மூலம் ஆண்டுக்கு 25 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. ரத்த சேமிப்பை அதிகரிக்க அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் பிற கல்லுாரியில் படிக்கும் மாணவர்களை ரத்தகொடையாளராக கொண்டு கிளப் துவக்கி ரத்தம் சேகரிக்கின்றனர். இருப்பினும் தேவையை பூர்த்தி செய்ய போதிய ரத்தம் கிடைக்கவில்லை. இதனால், ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் டாக்டர்கள் குழுவினர் இம்முயற்சியில் இறங்கினர்.
தென் மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே முதன்முறையாக, மதுரையில் 'பிளட் பேங்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' என்ற 'சாப்ட்வேரை' உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் ரத்ததானம் செய்வோரின் பெயர், வரிசை எண், முகவரி, ரத்தவகை உள்ளிட்ட விபரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.
இப்பதிவில் இடம்பெற்ற ரத்தகொடையாளர்கள் ரத்தம் வழங்கியவுடன் அவர்களுக்கு 'நன்றி' எனவும், 3 மாதம் கழித்து மீண்டும் ரத்தம் வழங்கலாம் என்றும் அவர்களது அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி ரத்தம் சேகரிக்கின்றனர். தவிர, அவரை ரத்த வங்கி குடும்பத்தில் ஒருவராக இணைத்து, கொடையாளரின் பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு, பொங்கல் உட்பட பல்வேறு பண்டிகைகளுக்கு வாழ்த்து தகவலும் அனுப்புகின்றனர். இதன்மூலம், ரத்த கொடையாளர்களை உற்சாகப்படுத்தி ரத்த வங்கிக்கு அதிக ரத்தம் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
ரத்தவங்கி டாக்டர் ஒருவர் கூறியதாவது: சாப்ட்வேர் மூலம் ரத்தம் வழங்கியவரின் பெயர், பதிவுஎண் கம்ப்யூட்டரில் ஏற்றப்படும். ஒரு முறை ரத்தம் வழங்கி, 3 மாதத்திற்குள் ரத்தம் வழங்கினால், அவர்கள் பற்றிய தகவல் 'சாப்ட்வேரில்' ஏறாமல் புறக்கணிக்கப்படும். இதை வைத்து, அவருக்கு விழிப்புணர்வு வழங்குவோம். அடுத்த கட்டமாக ரத்தம் சேமித்த பேக்கில் 'பார்கோட்' எண் பொருத்த உள்ளோம். இதன் மூலம் கொடையாளர் வழங்கும் ரத்தம் யாருக்கு, எந்தநோய் பாதிப்பிற்கு வழங்கினோம் என்ற விபரம் அலுவலக தேவைக்காக தெரிந்துகொள்ளலாம், என்றார்.

மூலக்கதை