வேட்டை தடுப்பு காவலர்களுக்கு உபகரணங்கள் அவசியம்! பணிக்கு ஏற்றவாறு வழங்க அரசுக்கு கோரிக்கை

தினமலர்  தினமலர்

உடுமலை;வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு, பணிக்கேற்றவாறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில், 60 பேர், வேட்டைத்தடுப்பு காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் தலையாயப்பணியாக, வனம் மற்றும் வனஉயிரினங்களை பாதுகாத்தல், வனத்தில் அந்நிய நபர்கள் ஊடுருவுவதைக் கண்காணித்தல், காடுகளிலிருந்து வெளியேறும் உயிரினங்களை மீட்டு அவற்றின் வாழ்விடங்களில் விடச் செய்தல், இறக்கும் பெரிய உயிரினங்களின் பிரேதப் பரிசோதனைகளில் உதவியாளராகப் பணியாற்றுதல் போன்றவை உள்ளது. மேலும், கஞ்சா பயிரிடுதல், சாராயம் காய்ச்சுதல் மற்றும் அந்நியர் ஊடுருவலை தடுத்தல், வனத்தில் தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதுடன் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு, பணிக்கேற்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு இல்லைசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: கோடைக்காலங்களில், காட்டுத்தீயை அணைக்கும் வேட்டைத்தடுப்பு காவலர்கள், காற்றின் வேகம், காற்று அடிக்கும் திசையைக் கணித்து, பச்சிலைகளைக் கொண்டே தீயை அணைக்கின்றனர்.ஒரு சில நேரங்களில் நீண்ட பள்ளங்களை வெட்டியும் தீ அணைக்கப்படுகிறது. அதேபோல், ஊருக்குள் புகும் காட்டு யானைகளை எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியே, வனத்துக்குள் விரட்டுகின்றனர்.வனங்களில் பல நாட்கள், தண்ணீர் இன்றி சுற்றித்திரியும் இவர்கள், அவ்வப்போது மரங்களிலும் குகைகளிலும் இரவுகளைக் கழிக்கின்றனர்.சம்பளமும் குறைவுஆனால், இவர்கள் வாங்கும் ஊதியம், அரசுத்துறையின் கடைநிலை ஊழியர் வாங்கும் ஊதியத்தைவிட மிகக் குறைவாகும். அதேபோல், வனவிலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி இறக்கும் வேட்டைத்தடுப்பு காவலர் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அளிக்கப்படுவதில்லை.வரும் காலங்களில், காட்டுத்தீ பரவும் வாய்ப்பு இருப்பதால், வேட்டைத்தடுப்பு காவலர்களின் நலன் கருதி, பணிக்கு ஏற்றாற்போல், பாதுகாப்பு உபகரணங்கள் அளித்தல் வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பதவி உயர்வும் வழங்கலாம்வனத்துறையில், கடந்த, 2010 ம் ஆண்டு முதல், பணிபுரிபவர்களை, மிகைப் பணியிட வேட்டைத் தடுப்பு காவலர்களாக, பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக, 6,750 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வேட்டைத்தடுப்பு காவலர் பணியிடத்தில் பட்டப்படிப்பு, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், 25 முதல், 40 வயதுடையவர்கள் ஆவர்.ஆகையால், கல்வித் தகுதி அடிப்படையில், அவர்களை வனக்காவலர்களாக பணியமர்த்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனக்காவலர்களாக பதவி உயர்வு கிடைக்கப்பெற்றால், காடுகளை பாதுகாப்பதில் அவர்கள் முனைப்பு காட்டுவர். தவிர, தனியார் பங்களிப்புடன் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது அவசியமாகும்.

மூலக்கதை