தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தினமலர்  தினமலர்
தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

அபுஜா: 14.1.2018 அன்று காலை லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வண்ணக்கோலம் மற்றும் கரும்புக்கு இடையில் பொங்கலிட்டு தமிழ்க்கடவுளாம் முருகனின் தரிசனத்தை பெற்று தை மாதம் முதல் தேதியை இனிதே துவங்கினர். அலங்கரித்த மண் பானையில் 9.30 மணிக்கு பாலிட்டு பொங்கல் கூவி தமிழர் திருநாளை முருகன் சன்னதிக்கு முன் சிறப்பாக துவங்கினர்.
தாய்நாட்டை விட்டு தொலைதூரம் இருந்தாலும் நமது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துக்காட்டுவதில் நைஜீரியா தமிழ் சங்கம் எப்பொழுதும் பெரும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது. இம்முறை அறுவடை திருநாளை நமது தமிழ்நாட்டின் கிராமிய வாசம் வீச இலுபேஜு பூங்காவில் மாதிரி கிராமம் வடிவமைத்து அதில் ஆடவர், பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி தமிழ் நெஞ்சங்களை குதூகலப்படுத்தியது நைஜீரியா தமிழ் சங்கம். பூங்கா வாசலில் வண்ணக்கோலம் போட்டு குலை தொங்கிய வாழைமரத்துடன் தமிழ் நெஞ்சங்களை அன்புடன் வரவேற்றது.
ஆண்களுக்கான கபடி போட்டியில் துவங்கி, பெண்கள் கும்மி, ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் குழந்தைகளுடன்கரகாட்டம் என நமது மண்ணிற்கே உரித்தான பொக்கிஷங்களை எடுத்துக்காட்டினர். குழந்தைகள் சாக்குப் போட்டி, மெது மிதிவண்டி, கோழி பிடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என அனைத்தும் விளையாடி ஒரு புதிய பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பானை உடைக்கும் போட்டியும் நடந்தது. மார்கழி மாதம் முழுதும் வீட்டு வாசலில் வண்ணக்கோலம் போட்டு அக்கம் பக்கத்து வீட்டினிடையே போட்டிக்களமாக பார்ப்பது நமது தமிழ் நாட்டு பெண்களின் இயற்கை.

வெளிநாட்டில் வாழும் தமிழ் பெண்கள் இதனை அனுபவிக்கும் வகையில் கோலப்போட்டியும் ஏற்பாடாகி இருந்தது. விளையாட்டு மற்றும் ஆட்டம் அனைத்தும் நடந்தேறியது. எனினும் பாட்டு/இசை இல்லாமல் பொங்கலோ பொங்கல் நிறைவேறாது அல்லவா? மகளிர் மற்றும் ஆடவர் இடையில் எசப்பாட்டும் பாடி நெஞ்சம் மகிழ்ந்தனர். பொங்கிய பொங்கல் போல் உள்ளம் இனித்திட மகிழ்ச்சி பெருகிட உடல் வலிமையோடு புத்தி கூர்மை பெற்று தெளிவான எண்ணம் வயப்பட அனைத்து உலக தமிழர்களுக்கும் நைஜீரியா தமிழ் சங்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மூலக்கதை