சுகாதார நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள்... 'ஆப்சென்ட்!'கிராமப்புற மக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு

தினமலர்  தினமலர்

காஞ்சிபுரம்;மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், அன்று நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடு களை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு பகுதியாக பிரித்து சுகாதார துணை இயக்குனர்கள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது.இதில், காஞ்சிபுரம் மண்டலத்தில், 38 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 217 துணை சுகாதார மையங்களும் உள்ளன.அதுபோல, செங்கல்பட்டு சுகாதார மண்டலத்தில், 38 ஆரம்ப சுகாதார நிலைங்களும், 157 துணை சுகாதார மையங்களும் செயல்படுகின்றன.இதில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர், செவிலியர், மருந்தாளுனர், லேப் டெக்னீஷியன், பணியாளர் ஆகியோர் இருக்க வேண்டும்.மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில், மூன்று முதல் ஐந்து டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சாதாரண நோய்களுக்கு சிகிச்சையும், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை, தடுப்பூசி, பேறுகாலம் பார்த்தல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.பல ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு மருத்துவர் மட்டும் உள்ளார். விடுப்பு மற்றும் வார விடுமுறை நாட்களில் அந்த நிலையத்தில் மருத்துவர் இருக்க மாட்டார். அதற்கு பதில் மாற்று மருத்துவரும் நியமிப்பதில்லை.மருத்துவர் இல்லாத நாட்களில் செவிலியரே மருந்து, மாத்திரைகள் வழங்குவார். செவிலியரும் விடுப்பில் இருந்தால் மருந்தாளுனர் மாத்திரை வழங்குவார்.ஆரம்ப சுகாதார நிலையங்களை நம்பி பல கிராமங்கள் உள்ளன. இரவு நேரத்தில் அவசர சிகிச்சை அளிக்க முடியாமல் பலர் நகர் புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை இன்னும் நீடிக்கிறது.ஒரு மருத்துவர் விடுப்பில் சென்றால், அவருக்கு பதில் மாற்று மருத்துவர் நியமிக்க கூடிய வகையில் மருத்துவர்கள் இல்லை.வேறு ஒரு சுகாதார மையத்தில் உள்ள மருத்துவரை அனுப்ப வேண்டிய சூழல் உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.ஞாயிற்றுக்கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத நிலையில், அரசு மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கும் அதே நிலை தான்!அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் ஒருவர் மட்டும் இருப்பதால், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளை முறையாக கவனிக்க முடியாத நிலையும், பொது மக்கள் ஏதாவது கேட்டால், அவர்களுக்கு தகுந்த பதில் சொல்லாமல் மரியாதை குறைவாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.இந்த சம்பவம் மாவட்ட சுகாதார உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தும், அவர்களும் கண்டு கொள்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் உள்ளனர். ஆனால், கூடுதல் டாக்டர்கள் கிடையாது. ஒரு மையத்தில் உள்ள டாக்டர் விடுப்பில் சென்று விட்டால், அவருக்கு பதில் வேறு மையத்தில் இருந்து டாக்டரை அங்கு அனுப்ப வேண்டும். இதில், மருத்துவ விடுப்பு பேறு கால விடுப்பில் டாக்டர்கள் சென்று விட்டால், அந்த இடம் காலியாகத்தான் இருக்கும். டாக்டர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் வார விடுமுறை. அந்த நாட்களில் செவிலியர்கள் தான் மா-த்திரை கொடுப்பர். இருக்கும் டாக்டர்களை வைத்து சமாளித்து கொண்டிருக்கிறோம்.சுகாதார அதிகாரி ஒருவர்காஞ்சிபுரம்அரசு மருத்துவமனைகளிலும்டாக்டர்கள் பற்றாக்குறைகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளிலும் பெரும்பாலான மருத்துவர்கள் வார விடுப்பில் இருப்பதால் இருக்கும் ஒரு சில மருத்துவரை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.அதனால், அன்று பொதுமக்கள் அரசு மருத்து-வமனைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் பல தனியார் மருத்துவமனைகளும் விடுப்பு என்பதால், பொதுமக்கள் போதிய சிகிச்சை பெற முடியாமல் அவதிபடும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.இப்படி செய்யலாம்வாரம் முழுவதும் வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கு வார விடுமுறை கட்டாயம் தேவை. ஆனால், மொத்தமாக அனைத்து மருத்துவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு எடுப்பதற்கு பதில், ஒவ்வொரு பகுதியில் உள்ள மருத்துவ மனைகளிலும் வெவ்வேறு கிழமைகளில் வார விடுப்பு அளிக்கலாம். அதனால் நோயாளிகளுக்கும் தகுந்த சிகிச்சை கிடைக்கும் என, கிராமப்புற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை