காணும்பொங்கலை விமரிசையாக கொண்டாட பொதுமக்கள் தயார்: மெரினா, பொழுதுபோக்கு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு

தினமலர்  தினமலர்
காணும்பொங்கலை விமரிசையாக கொண்டாட பொதுமக்கள் தயார்: மெரினா, பொழுதுபோக்கு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு

காணும் பொங்கலையொட்டி, சென்னையில், மெரினா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வண்டலுார், கிண்டி சிறுவர் பூங்காவில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று, காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி, புத்தகக் கண்காட்சி, வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.இதனால், அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். அதிக மக்கள் கூடும் இடமான மெரினாவில், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் பகுதிகளில், காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் உதவி மையம், தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமரா மூலம், மெரினா கடற்கரை முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.மெரினாவில், குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுவோரை, குதிரைப்படை வீரர்கள் கட்டுப்படுத்துவர். நீச்சல் வீரர்களும், தயார் நிலையில் உள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு
மெரினாவில், குழந்தைகள் தவறுவதை தடுக்க, குழந்தையின் பெயர், தந்தை பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற விபரங்கள் அடங்கிய அட்டையை, குழந்தைகள் கையில் கட்டி அனுப்ப, முகப்பு பகுதியில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். தங்கள் குழந்தைகள் பாதுகாப்புக்காக, பெற்றோர் இதை பயன்படுத்த வேண்டும் என, போலீசார் கேட்டுக் கொண்டனர்.
எலியட்ஸ் கடற்கரை
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 350 போலீசார் பாதுகாப்பில் உள்ளனர். கடற்கரையை ஒட்டி உள்ள, பெசன்ட் நகர், 6வது அவென்யூவில், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தனியார் குதிரைகள் மூலம் குளிப்போரை கண்காணித்து தடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
புத்தக கண்காட்சி
சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லுாரி எதிரே, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், புத்தகக் கண்காட்சி நடக்கிறது. இங்கு, 700 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறும்படம், ஆவணப்படம் திரையிடல், வாசகர்களுடன் எழுத்தாளர்கள் சந்திப்பு, பாரம்பரிய இசை, சிறப்பு சொற்பொழிவு ஆகியவை நடைபெறும்.
வண்டலுார் உயிரியல் பூங்கா
வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிவர் என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பயணச்சீட்டு வழங்க கூடுதல் கவுன்டர்கள், 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதே போல், கிண்டி சிறுவர் பூங்காவிலும், பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மால்கள், திரையரங்குகள்கிழக்கு கடற்கரை சாலையில், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன. இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.பீனிக்ஸ் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்கைவாக் உள்ளிட்ட மால்கள் அமைந்துள்ள சாலைகளில், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நெரிசலை குறைக்க, அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
கட்டண விபரங்கள்
வண்டலுார்
உயிரியல் பூங்காநுழைவு கட்டணம்

பெரியவர்கள்ரூ. 50

சிறுவர்கள்
ரூ. 20

பேட்டரி கார் கட்டணம்

பெரியவர்கள்
ரூ. 100
சிறுவர்கள்
ரூ. 30

சிங்கம் மற்றும் மான்கள் பார்வையிட வாகன கட்டணம்

பெரியவர்கள் ரூ.100

சிறுவர்கள் ரூ.60

ஐ போன், டேப் ரூ. 25வீடியோ கேமரா ரூ. 150

சைக்கிள் வாடகை ரூ.20 (ஒரு மணி நேரம்)
கிண்டி சிறுவர் பூங்கா

பெரியவர்கள் ரூ. 20

சிறுவர்கள் ரூ. 5
கேமரா ரூ. 20

புத்தகக் கண்காட்சி
நுழைவு கட்டணம் ரூ.10- -நமது நிருபர்- -

மூலக்கதை