பாழான கட்டடங்களால் பயம்!அறநிலையத்துறை கண்டுகொள்ளாததால் அதிருப்தி : புதிய திட்டங்களை செயல்படுத்தினால் திருப்தி

தினமலர்  தினமலர்

குன்னுார்;இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் பராமரிப்பின்றி, 'குடி'மகன்களின் 'பார்' ஆக மாறி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமாக பல இடங்கள் உள்ளன. இந்த நிலங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டும், மிகவும் குறைந்த மதிப்பீட்டில் குத்தகைக்கு விடப்பட்டும் உள்ளன.
இதுமட்டுமின்றி, பல இடங்களில் உள்ள இடங்கள்; வீடுகள், மண்டபங்கள் என பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. அதில், சில இடங்களில் சமூக விரோத குற்றங்கள் நடந்து வருகின்றன.
குன்னுாரில் உள்ள விநாயகர் கோவில் மண்டபம், முந்தைய கணேஷ் தியேட்டர் மற்றும் இதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக உள்ளன. மேலும், இங்குள்ள சில குடியிருப்புகளின் வாடகை, பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு போர்டு ஒன்றை காளி கோவில் அருகே, அறநிலையத்துறை அதிகாரிகள் வைத்துள்ளனர்.
மேலும், விநாயகர் கோவில் அருகிலேயே, அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில், தனியார் ஒருவரால், கடந்த, 1939ம் ஆண்டு, கணேஷ் தியேட்டர் கட்டப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மூடப்பட்டது. இந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்து அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால், இந்த இடத்தை முறையாக பராமரிக்க, எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இங்கு கடந்த, 2015ம் ஆண்டில் பெய்த மழையின் போது, அருகில் இருந்த வருவாய் துறையின் கட்டடம் இடிந்ததால், பழைய தியேட்டர் வளாகத்தில், யாரையும் அனுமதிக்கவில்லை. தற்போது, பாழடைந்துபோன இந்த தியேட்டர், 'குடி'மகன்களின் 'பார்'களாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும், பிச்சைக்காரர்களின் குடியிருப்பாகவும் மாறியுள்ளது.தற்போது மழை பெய்யும் போது இவ்வழியாக மார்க்கெட் செல்பவர்கள் அச்சத்துடனேயே கடந்து வருகின்றனர். தியேட்டர் அருகில் உள்ள கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதுமட்டுமின்றி, கோவில் அருகேயுள்ள மண்டபத்தில், போதுமான கழிப்பிட வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. குடிநீரும் கிடைப்பதில்லை.
இதனால், விசேஷ காலங்களில் மண்டபம் எடுப்பவர்கள், தண்ணீரை லாரிகள் மூலமாக கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் அசம்பாவிதம் நடக்கும் முன் உரிய தீர்வு காண வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியும் எவ்வித பயனும் இல்லை.திருமண மண்டபம் கட்டணும்!
பா.ஜ., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''தந்தி மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் உட்பட அறநிலையத்துறை கோவில்களில் மட்டும் மாதத்துக்கு மூன்று முறை உண்டியல் பணம் எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், மண்டபம் உட்பட இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் குடிநீர் கட்டணம், மின் கட்டணம் போன்றவை லட்சக்கணக்கில் நகராட்சிக்கு கட்டாமல் உள்ளனர். அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ள குடியிருப்புகளில், வாடகை வசூலிக்காமல் நிலுவையில் உள்ளது. இந்த தொகையை அறநிலையத்துறை வசூலிக்க வேண்டும்; தியேட்டர் கட்டடத்தை புனரமைத்து, 'பார்க்கிங்' வசதியுடன் கூடிய பெரிய திருமண மண்டபமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''அறநிலையத்துறை, வருவாய் துறை இணைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி, அரசிடம் இருந்து நிதியை பெற்று, மக்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை