தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!

தினமலர்  தினமலர்

போத்தனுார் - பொள்ளாச்சி அகல ரயில் பாதை பணிகள் முடிந்து, ஓராண்டாகி விட்ட நிலையில், இன்று வரையிலும் தென் மாவட்டங்களுக்கான ரயில்களை இயக்காமல், தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஓரவஞ்சனை காட்டி வருகின்றனர்; தொடர் புறக்கணிப்பு காரணமாக, போராட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ஸ்டேஷனாக, கோவை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. 'ஏ1' அந்தஸ்துள்ள இந்த ஸ்டேஷன், கடந்த, 2017 - 18ம் ஆண்டில் தற்போது வரை, 220 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியிருக்கலாம் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், வருவாய்க்கேற்ப, இங்கே வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படுவதில்லை.
மிகமிக அவசியம்!
கோவை சந்திப்பு உட்பட நகரிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பது, நீண்ட கால எதிர்பார்ப்பாகவுள்ளது. இது ஒரு புறமிருக்க, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும், ஏற்கப்படுவதே இல்லை. இவற்றையும் விட, கோவையிலிருந்து மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டிய அவசியம், மிகமிக அதிகமாகவுள்ளது.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள், பணி மற்றும் தொழிலின் பொருட்டு, கோவையில் வசிக்கின்றனர். ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இந்த மக்களுக்கு, பஸ் பயணம் என்பது பாதுகாப்பற்றதாகவும், கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இதனால், பொள்ளாச்சி - பழநி வழித்தடத்தில் தென் மாவட்டங்களுக்கு, அதிகளவில் ரயில்களை இயக்குவதற்கான வாய்ப்பும், தேவையும் நிறையவே இருக்கிறது.
இந்த வழித்தடத்தில், நிறைய ரயில்களை இயக்கினால், வருவாய் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், போத்தனுார் - பொள்ளாச்சி இடையேயான, 40 கி.மீ., அகல ரயில் பாதை பணி, இதற்காகவே, 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை தயாராகி ஓராண்டாகி விட்டது.
கடந்த மார்ச் மாதத்தில், இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்கி, இருப்புப்பாதையின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டது. எல்லாப்பணியும் முடிந்து, ஆய்வும் முடிந்ததால், மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது ஓடிய, கோவை - ராமேஸ்வரம், கோவை - மதுரை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பத்து மாதங்கள் கடந்தும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களுக்கு, ஒரு ரயிலும் இயக்கப்படவில்லை. பொங்கலை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் மட்டுமே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
நேரம் கெட்ட நேரம்!
அதேநேரத்தில், கோவை யிலிருந்து மதுரை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு பாலக்காடு வழியாக ரயில்கள் சுற்றி இயக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சிக்கு, யாருக்குமே பயன் படாத நேரத்தில், பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. கோவையில், மதியம் 1:45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், பொள்ளாச்சிக்கு மதியம் 2:45 மணிக்கு செல்கிறது.அங்கு 3:05க்குப் புறப்பட்டு, கோவைக்கு 4:15 மணிக்கு வந்தடைகிறது. பொங்கல் முதல், (14ம் தேதி) கோவை - மதுரைக்கு பொள்ளாச்சி வழியாக பணிகள் ரயில் இயக்கம் மூன்று மாதங்களுக்கு துவங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே பயனில்லாத நேரத்தில் கோவை - பொள்ளாச்சிக்கு இயங்கிய ரயில், மூன்று மாதத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ரயிலை, காலை 7:15, 11:00, 1:30, 4:20, 5:30 இரவு 11:00 மணி ஆகிய 6 நேரங்களில் இயக்கினால், பல ஆயிரம் மக்கள் பயனடைவர்; பஸ் போக்குவரத்து, மாசு, விபத்து எல்லாமே குறையும். ஆனால், மதிய நேரத்தில் இதை இயக்குவதால், மக்கள் கூட்டமே இல்லை. ஒரு முறை, இந்த ரயிலை இயக்குவதற்கு, 1.25 லட்சம் ரூபாய் செலவாகிறது; 6,000 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கிறது என்று கூறி, இதையும் நிரந்தரமாக நிறுத்தவே ரயில்வே அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.
பயணிகள் ரயில் இயக்கப்பட்டால், கோவை - பொள்ளாச்சி - உடுமலை வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பஸ்களின் வருவாய் பாதிக்கப்படும் என்பதால், அதன் உரிமையாளர்கள் தரும் 'பெட்டி'க்காகவே, இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கு, தெற்கு ரயில்வே அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் குதித்த போராட்டக்குழுவும் ஏன் அமைதியாகி விட்டது என்பது புரியாத புதிராகவுள்ளது.
ரயில்வே போராட்ட குழுவை சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில், ''போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாறைகளை அகற்ற நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடப்பதற்காக காத்திருக்கிறோம். நடவடிக்கைகள் எடுக்காதபட்சத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக விரைவில் போராட்டத்தில் இறங்குவோம்,'' என்றார்.
போராடினால் மட்டுமே எதுவும் கிடைக்குமென்பதே, கோவை மக்களின் மாறாத தலையெழுத்தாக மாறி வருவது, வேதனை தரும் விஷயம்.
இதுவே முன் உதாரணம்!
சிட்டிசன் வாய்ஸ் கிளப் செயலர் ஜெயராமன் கூறுகையில்,''கோவை - திருச்சி ஜனசதாப்தி அறிமுகப்படுத்தியபோது, ஏ.சி., சேர்கார் மட்டும் இருந்தது; உணவு கட்டாயம் என்று கூறி, அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. எதிர்ப்பு கிளம்பியதால், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் சேர்த்து, உணவு கட்டாயமில்லை என்று அறிவித்தபின், இப்போது நல்ல கூட்டத்துடன் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. அதேபோன்று, பொள்ளாச்சி பயணிகள் ரயில் நேரத்தை மாற்றி இயக்கினால், நல்ல வருவாய் கிடைக்கும். ராமேஸ்வரம் ரயிலையும், மீண்டும் இதே வழித்தடத்தில், அதே நேரத்தில் இயக்க வேண்டும்,'' என்றார்.-நமது நிருபர்-

மூலக்கதை