கடலுக்கு செல்லும் மீனவர்கள் தங்கும் கூடங்கள் வலைகளை பாதுகாக்க வழி இல்லாததால் தவிப்பு

தினமலர்  தினமலர்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முதல் முடி வீரன்பட்டினம் வரையில் உள்ள கடற்கரைப்பகுதியில் மீனவர்கள் தங்கும் கூடங்களும், வலைகளை பாதுகாக்க வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மண்டம் பகுதியில் இருந்து பிரப்பன்வலசை, ஆற்றங்கரை, அழகன்குளம், மற்றும் முடிவீரன்பட்டினம் வரையில் 30 கி.மீ., கடற்கரைப்பகுதிகள் உள்ளன. மண்டபத்தில் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மற்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு, பைபர் படகு, வத்தை, கரைவலை மீன் பிடி தொழில் நடந்து வருகிறது.இதனை நம்பி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் நள்ளிரவு 12:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றனர். இவர்கள் தொழிலுக்கு செல்லும் நாட்களில் கடற்கரையில் தான் இரவு உறங்குகின்றனர். தொழிலுக்கு பயன்படுத்தும் வலைகளையும் கரைப்பகுதியில் தான் பாதுகாக்கின்றனர்.
திடீரென கடல் சீற்றங்கள் ஏற்பட்டால், சீறிப்பாயும் அலைகளால் வலைகளை கடலுக்குள் இழுத்து சென்றுவிடும். இரவு நேரங்களில் மழை யெய்தால் மீனவர்கள் ஒதுங்க கூட வழியின்றி தவித்து வருகின்றனர். தொழிலுக்கு சென்று வந்த பின்னர் வலைகளை உலர்த்தவும் திறந்த வெளியில் பயன்படுத்துவதால், கடும் வெப்ப நேரங்களில் வெயிலில் காய்கின்றனர்.இப்பகுதிகளில் மீனவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும் கடற்கரைப்பகுதியில் கூடம் அமைத்து தரக்கோரி மீனவர்கள் தரப்பில், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். இன்று வரை மீன் வளத்துறை அதிகாரகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மீனவர்களையும், வலைகளை பாதுகாக்கவும், வலைக்கூடங்களை அமைத்து தர மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை