மாநகராட்சியில் தொழில் நடத்த 'டிரேட் லைசென்ஸ்' கட்டாயம்:ஜனவரிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்

திண்டுக்கல்:மாநகராட்சி பகுதியில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் 'டிரேட் லைசென்ஸ்' பெறுவது கட்டாயமாகிறது. 27 ஆண்டுகளுக்கு பின் லைசென்ஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட ஒரு சில தொழில்களுக்கு மட்டும் லைசென்ஸ் பெற்று நடத்தி வந்தனர். இனி உரிமம் இன்றி உள்ளாட்சி பகுதியில் எந்த தொழிலையும் நடத்த கூடாது என சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 145 வகையான 500க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு 'டிரேட் லைசென்ஸ்' எனும் உரிமம் பெற வேண்டும். 2010ல் இதற்கான சட்டத்திருத்தம் செய்யப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
லைசென்ஸ் கட்டாயம்
திண்டுக்கல் மாநகராட்சியில் ஏற்கனவே உரிமம் பெற்றவர் அதே இடத்தில் அதே தொழிலை செய்ய விரும்பினால் ஒவ்வொரு நடப்பு நிதிஆண்டும் முடிவதற்குள் 45 நாட்களுக்கு முன்னதாகவே தொகையை செலுத்தி உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதன்படி பிப்., 14க்குள் உரிம கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரே இடத்தில் பல வியாபாரம், தொழில்கள் நடத்தினால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி லைசென்ஸ் பெற வேண்டும்.உள்ளாட்சி பகுதியில் முன்பு சலவை நிலையம், காபி, உணவு விடுதிகள், ஓட்டல், பெட்டிக்கடை, வீட்டில் தயாரிக்கும் இட்லி, ஆப்பம், பலகாரம், பூட்டு, கல்லாப்பெட்டி, லாக்கர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்தல், தையல் கடை, பழம், குளிர்பான கடைகள் போன்றவற்றை இதுவரை உரிமம் பெறாமல் நடத்தி வந்தனர்.
இனி இவர்களும் 'டிரேட் லைசென்ஸ்' பெறுவது கட்டாயம்.உள்ளாட்சி அனுமதி பெற்று நடத்திய கடைகளுக்கு கட்டணமாக இரண்டு மற்றும் மூன்று இலக்க தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது டிரேட் லைசென்ஸ் கட்டணமாக. ரூ.50 முதல் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொழில் நடத்துவோருக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தை ஜனவரிக்குள் பதிவு செய்து பிப்ரவரி 14 க்குள் கட்டணம் செலுத்தினால் அபராதத்தை தவிர்க்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை